வடமாகாணம்- மன்னார் மாவட்டம்- மன்னார் – அருள்மிகு ஸ்ரீமுருகன் திருக்கோயில்
ஆறுமுகம் கொண்டிருந்து அருள் பொழியும் திருமுகத்தோன்
அச்சம் அகற்றி யெம்மை ஆட்கொள்ள வந்திடுவான்
நம்பியவன் தாள்பணிந்தால் நலன்கள் வந்து நமைச்சேரும்
மன்னாரில் கோயில் கொண்ட ஸ்ரீமுருகன் எமக்கருள்வான்
பன்னிரு கை கொண்டு அணைத்தருளும் திருமுருகன்
பயமின்றி நாம் வாழ வழியமைக்க வந்திடுவான்
துணை நீயே என்றவனைப் பற்றியே பிடித்துவிட்டால்
மன்னாரில் கோயில் கொண்ட ஸ்ரீமுருகன் எமக்கருள்வான்
பன்னிரு கண்கள் விழித்திருந்து காவல் செய்யும் கந்தனவன்
கருணை கொண்டு எமையென்றும் காக்கவே வந்திடுவான்
ஆறுதல் நீ யென்று அவன் தாளைச் சரணடைந்தால்
மன்னாரில் கோயில் கொண்ட ஸ்ரீமுருகன் எமக்கருள்வான்
அழகு மயில் மீதமர்ந்து ஆசிதரும் வேலவன்
ஆதரவு தந்தெம்மை ஆதரிக்க வந்திடுவான்
சிந்தையிலே அவன் நாமம் என்றும் நினைத்திருந்தால்
மன்னாரில் கோயில் கொண்ட ஸ்ரீமுருகன் எமக்கருள்வான்
குன்று தோறுமிருந்து குவலயத்தை ஆளும் குகன்
குற்றங்கள் களைந்து எம்மைக் காக்கவே வந்திடுவான்
நீயே கதியென்று அவன் பாதம் பற்றிவிட்டால்
மன்னாரில் கோயில் கொண்ட ஸ்ரீமுருகன் எமக்கருள்வான்
சூரபத்மன் ஆணவத்தை அடக்கிய சுந்தரன்
சூழ்ந்து வரும் நன்மைகளை எமக்காக்க வந்திடுவான்
சூழ்ச்சி தடுவென்று அவனடியைத் துணைக் கொண்டால்
மன்னாரில் கோயில் கொண்ட ஸ்ரீமுருகன் எமக்கருள்வான்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.