மேல்மாகாணம்- கம்பஹா மாவட்டம்- நீர்கொழும்பு, கடற்கரை வீதி அருள்மிகு சித்தி விநாயகர் திருக்கோயில்
மேற்கிலங்கை கரையினிலே கோயில் கொண்ட விநாயகரே
மேன்மை நிறை நல்வாழ்வை என்றும் எமக்கருளிடைய்யா
மேதினியில் நல்லமைதி என்றும் நிலைத்துவிட
கருணை செய்வாய் நீர்கொழும்பில் உறை சித்தி விநாயகரே
துணைதந்து எமையாளும் தூயவரே விநாயகரே
துன்பங்கள் துடைத்தெறிந்து எமைக்காக்க வந்திடைய்யா
தூய்மைமிகு உறவுகள் என்றும் நிலைத்துவிட
கருணை செய்வாய் நீர் கொழும்பில் உறை சித்தி விநாயகரே
ஆற்றல் தந்து அறிவு தந்து ஆதரிக்கும் விநாயகரே
ஆறுதல் மிகு நல்வாழ்வை எமக்காக்க வந்திடைய்யா
அன்பு கொண்ட நல்லுறவு நாளும் நிலைத்துவிட
கருணை செய்வாய் நீர் கொழும்பில் உறை சித்தி விநாயகரே
எழுச்சிமிகு மனநிலையை எமக்கருளும் விநாயகரே
ஏற்றமிகு நல்வாழ்வை உவந்தளிக்க வந்திடைய்யா
உறுதி கொண்ட மனநிலையே என்றும் நிலைத்துவிட
கருணை செய்வாய் நீர் கொழும்பில் உறை சித்தி விநாயகரே
சித்திகள் வழங்கி நல்லோர் நலன் காக்கும் விநாயகரே
நித்தம் உடனிருந்து காத்தருள வந்திடைய்யா
சத்தியம் தவறா நிலை என்றும் நிலைத்துவிட
கருணை செய்வாய் நீர் கொழும்பில் உறை சித்தி விநாயகரே
ஆனைமுகம் கொண்டிருந்து அருள் பொழியும் விநாயகரே
அச்சமில்லா வாழ்வு தர விரைந்து வந்திடைய்யா
நிம்மதியே என்றும் நிலைத்துவிட
கருணை செய்வாய் நீர் கொழும்பில் உறை சித்தி விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.