வடமாகாணம் – வவுனியா மாவட்டம் – வவுனியா பெரிய தம்பனை – அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில்
ஆறாத துன்பங்களை ஆற்றுகின்ற விநாயகரே
ஆதரித்து அரவணைத்து அருளிடவே வாருமைய்யா
தொல்லைகளை போக்கிவிடு துணையாக இருந்துவிடு
பெரியதம்பனை வீற்றருளும் வரசித்தி விநாயகரே
ஆதரவு தந்தெம்மை அணைத்தருளும் விநாயகரே
அவலமில்லா பெருவாழ்வை அருளிடவே வாருமைய்யா
அச்சம் போக்கிவிடு அரவணைப்பைத் தந்துவிடு
பெரியதம்பனை வீற்றருளும் வரசித்தி விநாயகரே
வன்னித் தமிழ் மண்ணில் வந்துறையும் விநாயகரே
வாட்டமின்றி வாழ்ந்திடவே அருளிடவே வாருமைய்யா
தோல்வியில்லா வாழ்வு தந்து ஆற்றலையும் தந்துவிடு
பெரியதம்பனை வீற்றருளும் வரசித்தி விநாயகரே
எழுச்சி தந்து உயர்ச்சிதர எழுந்தருளும் விநாயகரே
மகிழ்ச்சி நிறை வாழ்வினை அருளிடவே வாருமைய்யா
முயற்சியுடை வாழ்வு தந்து முன்னேற்றம் தந்துவிடு
பெரியதம்பனை வீற்றருளும் வரசித்தி விநாயகரே
இருக்குமிடம் நிம்மதியாய் வாழவிடும் விநாயகரே
இல்லாமை இல்லா நிலை என்றும் அருளிடவே வாருமைய்யா
இம்சையில்லா வாழ்வுதந்து இன்பநிலை தந்துவிடு
பெரியதம்பனை வீற்றருளும் வரசித்தி விநாயகரே
அறிவு தந்து ஆற்றல் தந்து மேன்மை தரும் விநாயகரே
அழிவில்லா மேன்மை நிலை அருளிடவே வாருமைய்யா
இதயத்தில் நீ உறைந்து உற்சாகம் தந்துவிடு
பெரியதம்பனை வீற்றருளும் வரசித்தி விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்துமாமன்றம்.