வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், யாழ்ப்பாண மாநகரம் நல்லூர் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
நல்லூர் நற்பதியில் எழுந்தருளி நலம் வழங்கும் வேலவனே
உயர்ந்திடவே நம் வாழ்வு உறுதுணையாயிருப்போனே
பயங்கள் தரும் தீவினைகள் அகற்றிடவே வருவோனே
மயங்கி நிற்கும் உன்னடியார் இதயங்களில் எழுந்தருள்வாய்
போற்றி நிற்கும் அடியவர்கள் துணையிருக்கும் பேரருளே
ஏற்றியுந்தன் தாள் பணியும் இதயங்களில் நிறைந்தோனே
ஆற்றல் தந்து அருளளித்து அரவணைத்துக் காப்போனே
பற்றி நிற்கும் பக்தர்களின் குறைகளைய எழுந்தருள்வாய்
திக்கெங்கும் அருள் பரப்பி தீவினைகள் களைவோனே
எத்திக்கும் கருணை செய்து காவல் செய்யும் அழகோனே
முத்தமிழின் காவலனாய் மூலமுமாய் இருப்போனே
காத்து வளமளிப்பாய் கருணை செய்வாய் எழுந்தருள்வாய்
அழகு மயில் ஏறிவந்து அன்பு செய்யும் சிவன் மகனே
பழனி மலை அமர்ந்திருந்து பக்குவமாய் அருள்வோனே
மழலை முகம் கொண்டவனே அன்னை உமை இளமகனே
பாழடையும் நிலை நீக்கி மீட்சிபெற எழுந்தருள்வாய்
முருகா என்றழைத்தால் முந்தி வந்து அருள்வோனே
அருகிருந்து நன்மை செய்து ஆறுதலை அளிப்போனே
மருங்கிருக்கும் அன்னையரின் ஆசியையும் தருவோனே
உருகியுந்தன் தாள்பணியும் எமக்கருள எழுந்தருள்வாய்
யாழ்ப்பாண மாநகரிருந்து கோலோச்சும் இளங்குமரா
மழுங்கிவிட்ட எம்வாழ்வு மலர்ச்சியுறக் கருணை செய்வாய்
நழுவிச் செல்லும் நன்மையெல்லாம் நமைவந்து சேர்ந்திடவே
பொழுதும் உந்தன் அடிபணியும் எமக்கருள எழுந்தருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.