கிழக்கு மாகாணம் – அம்பாறை மாவட்டம், கல்முனை, பாண்டிருப்பு அருள்மிகு திரௌபதை அம்மன் திருக்கோயில்
மனுக்குலத்தின் திருமகளாய் பிறந்தவளே தாயே
தரணியிலே நல்லமைதி நிலைநாட்டி அருளிடுவாய்
கொடுமைமிகு செயல்களெல்லாம் அழிந்தொழிய வேண்டும்
பாண்டிருப்பு கோயில் கொண்ட தாயே நீ அருள்வாய்
நீதி கேட்டு அரசவையில் நின்றவளே தாயே
நேர்மைமிகு நல்வாழ்வை உறுதிசெய்து அருள்வாய்
தீராத கொடுபகைமை அழித்தொழிக்க வேண்டும்
பாண்டிருப்பு கோயில் கொண்ட தாயே நீ அருள்வாய்
கிழக்கிலங்கை இருந்தருளும் உத்தமியே தாயே
கிலேசமில்லா பெருவாழ்வை உறுதி செய்து அருள்வாய்
பாதகங்கள் செய்வோரை சுட்டழிக்க வேண்டும்
பாண்டிருப்பு கோயில் கொண்ட தாயே நீ அருள்வாய்
தமிழ் ஒலிக்கும் திருமண்ணில் இருந்தருளும் தாயே
தலைதாழா பெருவாழ்வை தவறாமல் அருள்வாய்
தறிகெட்டு திரிவோரைத் திருத்திடவே வேண்டும்
பாண்டிருப்பு கோயில் கொண்ட தாயே நீ அருள்வாய்
தர்மத்தின் திருமகளாய் திகழுகின்ற தாயே
காவலாய் இருந்தெம்மைக் காத்து நீ அருள்வாய்
பழிபாவம் செய்வோரை அழித்தொழிக்க வேண்டும்
பாண்டிருப்பு கோயில் கொண்ட தாயே நீ அருள்வாய்
நல்லுணர்வின் நாயகியாய் விளங்குகின்ற தாயே
நாடி வந்து தொழும் எம்மை ஆதரித்து அருள்வாய்
நொந்து மனம் வாடாமல் காத்தருள வேண்டும்
பாண்டிருப்பு கோயில் கொண்ட தாயே நீ அருள்வாய்.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.