(க.கிஷாந்தன்)
மூன்று நாட்களுக்குப் பின்பு தலவாக்கலையில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு 6 ஆயிரத்து 500 லீட்டர் மண்ணெண்ணெய் கொண்டு வரப்பட்டது. இதனைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகாலை முதல் 1800 க்கும் மேற்பட்ட மக்கள் நீண்ட வரிசையில் பசி பட்டினியுடன் காத்திருந்தனர்.
சிலர் வீதிகளில் அமர்ந்து இருந்ததோடு, சிறுவர்கள், பாடசாலை, மாணவர்கள், முதியோர்கள், நோயாளர்கள் என பலரும் காத்திருந்தனர். அனைவருக்கும் டோக்கன் வழங்கப்பட்டது ஒருவருக்கு 250 ரூபாய் மாத்திரமே மண்ணெண்ணெய் விநியோகம் செய்யப்பட்டது. வெயிலுக்கு மத்தியிலும் பசி பட்டினியுடன் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்ததை எம்மால் அறிய முடிந்தது.
வரிசையில் காத்திருந்த மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
தம்பி அரிசிக்கு வரிசையில், அண்ணன் அம்மா மண்ணெண்ணெய் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நாடு வீணாகிப் போயுள்ளதாகவும் காலையில் 5 மணிக்கு ஒரு அம்மா வந்து மயக்கம் போட்டு விழுந்ததாகவும், அதனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்ததாகவும் கூறுவதோடு பகல் சாப்பாடு இல்லாமல் பிள்ளைகளுக்கு முறையாக சாப்பாடு கொடுக்க முடியாமல் கணவனுக்கு சாப்பாடு கொடுக்க முடியாமல் பட்டினியாக கிடக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக ஆதங்கத்துடன் தங்களின் குரலை வெளிப்படுத்தினர்.
இந்த அரசாங்கம் என்ன செய்கிறது. இனிமேல் சரி மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டு தீர்க்க முன்வரவேண்டும். வரிசையாக காத்திருந்தாலும் இரண்டு லிட்டர் மாத்திரமே மண்ணெண்ணெய் வழங்குகின்றார்கள். இதற்கு நாள் முழுவதும் காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாக இவர்கள் கவலைகளை வெளிப்படுத்தினர்.