News

சிறு தேயிலைத் தோட்டங்களின் வளர்ச்சியும் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார சவால்களும்

அருள்கார்க்கி

தேயிலைத் தொழில் ஆரம்பிக்கப்படும் காலப்பகுதியிலேயே சிறு தேயிலை தோட்டங்களும் உருவாகிவிட்டன. ஆரம்பகாலத்தில் இவை தனியாள் தோட்டங்களாக அடையாளப்படுத்தப்பட்டன. காலப்போக்கில் காணி சீர்த்திருத்தத்தின் பின்னர் இந்த தனியார் தோட்டங்கள் யாவும் தேயிலை சிற்றுடைமைகள் என்று வரையறைக்குள் கொண்டுவரப்பட்டன. காணி சீர்த்திருத்தம் கொண்டுவரப்பட்டபோது தேயிலை நிலங்கள் யாவும் இலங்கையர்களுக்கே சொந்தம் என்று அப்போதைய அரசாங்கம் அறிவித்தது. ஆயினும் அது தொழிலாளர்களுக்கு சொந்தமாகவில்லை. மாறாக தேயிலை காணிகளை சுவீகரிக்கும் நோக்கில் நில அளவை செய்தமைக்கு எதிராக போராடிய தொழிலாளர்களின் அறவழிப் போராட்டங்கள் துப்பாக்கி முனையில் ஒடுக்கப்பட்டன. இது அன்றே தேயிலை சிற்றுடைமைகளுக்கு அரசாங்கம் பக்கபலமாக இருந்ததற்கான அடிப்படையாகும்.

 

அன்று தொடக்கம் இன்றுவரை சிற்றுடைமையாளர்களுக்கு பல்வேறு வகையிலும் அரசாங்கம் பக்கபலமாக இருந்து வருகின்றது. 1975 இல் 117000 ஆக இருந்த தேயிலை சிறு தோட்ட உரிமையாளர்கள் 1982 இல் 236000 ஆக அதிகரித்து 2006 இல் ஏறக்குறைய 319000 பேராக உயர்ந்துள்ளனர். இந்த தொகை 2017 இல் 395414 ஆகவும், 2018 இல் 399313 ஆகவும், 2019 இல் 400987 ஆகவும், 2020 இல் 404291 ஆகவும் படிப்படியாக அபரிமிதமான வளர்ச்சியைக் காட்டி நிற்கின்றது. இது சிற்றுடைமையாளர்களின் வளர்ச்சிப் போக்கை மட்டுமல்லாது பெருந்தோட்டங்களின் வீழ்ச்சியையும் தெளிவுப்படுத்தும் குறிகாட்டியாகும்.

இவ்வாறு தேயிலை சிற்றுடைமையாளர்களாக உள்ளோரில் பெரும்பாலோனோருக்கு அரை ஹெக்டேயருக்கும் குறைவான தேயிலை நிலமே உரிமையாக உள்ளதுடன், இவர்களில் பெரும்பாலோனோர் காலி, மாத்தறை, இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களில் காணப்படுகின்றனர். தேயிலை சிறுதோட்ட உரிமையாளர்களுக்கான அதிகார சபையானது அவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு பொறுப்பாக செயற்படுகின்றது. அதேபோல் சமூக, பொருளாதார ரீதியாக இந்த தேயிலை சிற்றுடைமையாளர்களை பாதுகாக்கும் அமைப்பாகவும் இந்த அதிகார சபை செயற்பட்டு வருகின்றது.

தேயிலை சிற்றுடைமைகளில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு எவ்வித நலன்பேண் திட்டங்களும் இல்லாத போதும் தேயிலை தோட்ட உரிமையாளர்களுக்கு சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்கு சிறு தேயிலைத் தோட்ட அபிவிருத்தி அதிகார சபையானது பல்வேறு உதவித்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. அதில் முக்கியமானது 1980 களின் பின்னர் உயர் விளைச்சல் தரக்கூடிய தேயிலை கன்றுகளை வழங்கி வருகின்றது. இலகு வட்டியில் கடன்களை வழங்கியமை, பச்சைத் தேயிலைக்கு உயர்ந்த விலையை வழங்கியமை, உரமானியம் வழங்கியமை ஆகிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியுடன் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய தொழில்சாலைகளை நிர்மாணிக்க உதவியமை போன்றவற்றைக் கூறமுடியும்.

இவ்வாறான எவ்வித உதவிகளும் தேயிலைத் தோட்டங்களில் பணிபுரியும் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டதாக கடந்த 150 வருடகாலமாக அறிய முடியவில்லை. இன்று தேயிலை உற்பத்தியில் பெருந்தோட்டங்களை விடவும் சிற்றுடைமைகளே அதிகமான விளைச்சலை கொண்டிருக்கின்றன. இதனை ஒப்பிடுகையில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மொத்த தேயிலை உற்பத்தியை சிறு தெயிலை தோட்டங்களே மேற்கொள்கின்றன.

இலங்கையில் மொத்த விவசாய நிலத்தில் 16 சதவீதம் தேயிலை துறைக்கு சொந்தமானது. இதில் மொத்த தேயிலை கட்டுப்பாட்டு சட்டத்தின் படி (வுநய ஊழவெசழட யுஉவ) நாடு முழுவதும் 20 பேர்ச்சஸ் முதல் 10 ஏக்கர் வரையிலான தேயிலை நிலங்கள் சிறிய தேயிலை தோட்டங்களாக கருதப்படுகின்றன. இந்த பின்னணியில் சிறிய தேயிலை தோட்டங்களின் வளர்ச்சியானது சமகாலத்தில் அபரிமிதமானதாக காணப்படுகின்றது. பெருந்தோட்ட கட்டமைப்பை மிஞ்சிய அளவில் கணிசமான வளர்ச்சியை சிற்றுடைமைகள் கொண்டுள்ளன.

 

சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் வருடாந்த அறிக்கையின் படி (2020) இலங்கையின் தேயிலை உற்பத்தி மேலே அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது. இது தேசிய தேயிலை உற்பத்தி மேலாண்மை நிறுவனங்களின் பங்களிப்பு ஆகும். அதன்படி சிற்றுடைமைகள் 2018 ஆம் ஆண்டு மொத்த உற்பத்தியில் 75.02 சதவீதத்தை கொண்டுள்ளன. 2019 மற்றும் 2020 ஆம் வருடங்களிலும் முறையே 75.21 சதவீதம் மற்றும் 73.85 சதவீதம் வளர்ச்சியை கொண்டுள்ளது. மறுபுறம் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளின் மொத்த உற்பத்தி 2018 ஆம் ஆண்டு 24.2 சதவீதம், 2019 ஆம் ஆண்டு 24.05 சதவீதம், 2020 ஆம் ஆண்டு 25.37 சதவீதம் என்றவாறு உள்ளது. இது சிற்றுடைமைகளின் சமகால வளர்ச்சிக்கு சிறந்த உதாரணமாகும்.

2019 மற்றும் 2020 இரு ஆண்டுகளில் தேசிய தேயிலை உற்பத்தியின் வளர்ச்சிக்காக சிறு தேயிலை நிலப்பிரிவின் உற்பத்தி முக்கியமானதாக உள்ளது. இலங்கை தேயிலை சபையின் தேயிலை உற்பத்தி தொடர்பாக தரவுகளின் படி 2020 ஆம் ஆண்டில் சிறு தேயிலை நிலங்களின் சராசரி உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேயருக்கு முடிவுத் தேயிலை 1766 கிலோகிராம் ஆகும். 2019 ஆம் ஆண்டில் சிறு தேயிலை நிலப் பிரிவின் சராசரி உற்பத்தித்திறன் ஒரு ஹெக்டேயருக்கு முடிவுத் தேயிலை 1938 கிலோகிராம் என்றால் 2020 ஆம் ஆண்டில் உற்பத்தித்திறன் 8.8 சதவீத அதிகரிப்பாக கொண்டுள்ளது.
தேயிலை காணிகளின் அபிவிருத்தியை பொருத்தவரையில் சிற்றுடைமைகளின் வளர்ச்சியானது பெருந்தோட்டங்களுடன் ஒப்பிடக்கூட முடியாத அளவுக்கு சிறப்பாக காணப்படுகின்றது. பொதுவாக பெருந்தோட்ட கம்பனிகள் மீள்நடுகை விடயத்தில் சமகாலத்தில் அசமந்தப் போக்கையே கடைப்பிடிக்கின்றன. ஆனால் சிற்றுடைமையாளர்களானது மீள்நடுகை விடயத்தில் சிறப்பான செயற்றிறன் கொள்கையை கடைப்பிடிக்கின்றன.

2020 ஆம் ஆண்டில் மீள்நடுகைக்காக அனுமதிப் பத்திரங்களை வழங்கல் 41 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் உரிமம் பெற்றவர்கள் பழைய தேயிலை அகற்ற விண்ணப்பிக்கப்பட்ட ஹெக்டேயர் அளவு 52 சதவீதமாக அதிகரித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் தேயிலை மீள்நடுகைக்காக தேயிலை அகற்றிய ஹெக்டேயர் அளவு 682 ஆகும். அந்த அளவு வருடாந்த இலக்காக நிலப்பரப்பின் அதாவது 840 ஹெக்டேயரில் 81 சதவீத வளர்ச்சியாகும். முன்னைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பழைய தேயிலை அகற்றும் சதவீதம் 81 சதவீதமாக அதிகரித்து அந்த நிலப்பரப்பு 306 ஹெக்டேயரில் அதிகரித்துள்ளது.
2020 ஆம் ஆண்டில் சிற்றுடைமைகளின் மண் பதப்படுத்தல் இலக்காக கொண்ட நிலப்பரப்பு 624 ஹெக்டேயர் ஆவதோடு அதன் செயல்திறன் 94 சதவீத வளர்ச்சியாகும். இந்த அதிகரிப்புக்கு பிரதான காரணம் மீள்நடுகை எடுக்கும் நிறுவன இலக்கு 376 ஹெக்டேயர் வரை வீழ்ச்சியாகும். ஒதுக்கீடு கட்டுப்பாடு என்றால் 2020 ஆண்டில் மண் மறுவாழ்வு இலக்கு 400 ஹெக்டேயர் ஆகும். 2020 ஆம் ஆண்டில் மண் பதப்படுத்தல் திட்டத்தின் மூலம் முடிக்கப்பட்ட நிலப்பரப்பு 411 ஹெக்டேயர் ஆகும்.


இவ்வகையாக தேயிலை சிற்றுடைமைகளின் வளர்ச்சி காணப்படுமிடத்து அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் சமூக, பொருளாதார நிலையானது பின்னோக்கி செல்கின்றது. அவர்களின் சம்பளம் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் இவர்களுக்கு முழுமையாக கிடைப்பதில்லை. பொதுவாக நோக்குமிடத்து இவ்வாறான சிற்றுடைமைகளின் உரிமையாளர்களே அவற்றை நிர்வகிப்பவர்களாகவும், பராமரிப்பு, தொழிலாளர்களை கையாளுதல் போன்ற பணிகளையும் மேற்கொள்ளுகின்றனர். எனவே இவர்களின் முதன்மை நோக்கமாக இருப்பது இலாபகரமான முறையில் அறுவடையை பெற்றுக் கொள்வது மாத்திரமே. தொழிலாளர்களின் நலன்பேண் விடயங்களில் இவர்களுக்கு எவ்வித அக்கறையும் இல்லை. அதேபோல் இவ்வாறான சிற்றுடைமைகளில் தொழில்புரிவோர் எவ்வித இலக்க ரீதியான குழுவாகவும் இல்லாத காரணத்தினால் அவர்களின் உரிமைகள் தொடர்பாக எவ்வித முன்னேற்றமும் எட்டப்படுவது இல்லை. இது சிற்றுடைமை உரிமையாளர்களுக்கு வாய்ப்பான ஒன்றாகும்.மேலும் தேயிலை சிற்றுடைமைகளில் தொழில் புரியும் பெரும்பாலான தொழிலாளர்கள் நிரந்தர தொழிலாளர்கள் கிடையாது. அவர்கள் நாளாந்த கூலிக்கு தொழிலுக்கு வருபவர்களாவர்.
1950 ஆம் ஆண்டின் இலங்கையின் கைத்தொழில் சட்டம் (ஐனெரளவசயைட னுiளிரவநள யுஉவ – 1950) எந்தவொரு தொழில்துறையிலும் பணியாளர்களின் வேலைக்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் தொடர்பாக உடன்பாடாக ‘கூட்டு ஒப்பந்தம்’ உருவாக்கப்பட்டது. (உழடடநஉவiஎந யுபசநநஅநவெ) முக்கியமாக தேயிலை தொழில்துறையில் இந்த கூட்டு ஒப்பந்தம் தொழிலாளர்களின் ஊதியத்தில் கவனம் செலுத்துவதோடு ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கம்பனிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகள் மூலம் புதுப்பிக்கப்படுகின்றது. ஆனால் தேயிலை சிற்றுடைமையாளர்கள் இந்த கூட்டு ஒப்பந்தத்துக்கு கட்டுப்படுவது இல்லை. இது இவர்களுக்கு தமது ஊழியர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதில் முழுமையான சுதந்திரத்தை வழங்குகின்றது. சிற்றுடைமையாளர்கள் தமது இலாப நோக்கத்தை இரட்டிப்பாக்கி கொள்வதன் கொள்கையை முழுமையாக விரிவுப்படுத்த இது வாய்ப்பாக அமைகின்றது. மேலும் இவர்களின் கொடுப்பனவு முறையை கேள்விக்குட்படுத்த எந்தவொரு அதிகாரம் பொருந்திய நிறுவனமும் இல்லை. என்பதும் ஒரு பாரிய குறைபாடாகும்.

சுpற்றுடைமைகளில் தொழில் புரியும் தொழிலாளர்களுக்கு நிரந்தர சம்பளமாக ஒரு தொகையை நிர்ணயிப்பதில்லை. அவர்களின் அறுவடையை பொறுத்தே அவர்களின் நாளாந்த சம்பளம் தீர்மானிக்கப்படுகின்றது. பெரும்பாலான சிறு தேயிலை தோட்டங்களில் ஒரு கிலோ பச்சை தேயிலை பறிப்பதற்கு ரூ.30 வழங்கப்படுவதாக அறிய முடிகின்றது. இந்த தொகையானது அவர்களின் அறுவடையானது சராசரியாக 20 கிலோகிராமாக இருந்தால் அவர்களின் அன்றைய சம்பளம் ரூ. 600 மட்டுமேயாகும். ஆயினும் இன்று பச்சை தேயிலை ஒரு கிலோகிராம் சராசரியாக ரூ.200 வரை கொள்வனவு செய்யப்படுகின்றது. இவருமானத்தை அன்றைய தொழிலாளியின் நாளாந்த ஊதியத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் 1ஃ7 மடங்காக காணப்படுகின்றது.

தோழிலாளி ஒருவர் அன்றாடம் 20 கிலோகிராம் வரையில் பச்சை தேயிலையை அறுவடை செய்ய முடியுமா என்பதும் பாரிய சிக்கலான நடைமுறையாகும். அது தேயிலைச் செடியின் வயது, காலநிலை, மண்ணின் தன்மை, அறுவடை நடைமுறைகள் என்பவற்றை பொருத்து வித்தியாசப்படும்.
இது உற்பத்தி திறன் சார்ந்த ஊதியமாதிரி என்று அழைக்கப்படும்.

 

அதாவது அவர்களுக்கு நிலையான ஊதியமொன்று இல்லை. அவர்களின் அறுவடையை பொறுத்து அவர்களின் நாளாந்த ஊதியம் தீர்மானிக்கப்படும். இருப்பினும் 2000 ஆண்டுவரை பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளை போலவே சிற்றுடைமையாளர்களும் அனைத்து தொழிலாளர்களுக்கும் நாளாந்த ஊதியத்தை கொடுத்தனர். இது கூட்டு ஒப்பந்தத்தின் பிரகாரம் வழங்கப்பட்டதாகும். பின்னாளில் அவர்கள் மிகை இலாபத்தை அடையும் நோக்குடன் அந்த நடைமுறையிலிருந்து விடுபட்டு தமக்கு சாதகமான உற்பத்தி திறன்சார்ந்த ஊதிய மாதிரிக்கு சென்று விடலாம். அதேபோல் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களின் மேலதிக கொடுப்பனவுகள், ஊழியர் சேமலாப நிதிய பங்களிப்பு, உழியர் நம்பிக்கை நிதிய பங்களிப்பு சேவைக்கால கொடுப்பனவு போன்ற எவ்வித நலன்புரி சேவைகளும் முழுமையாக வழங்கப்படுவதில்லை. பதுளை மாவட்டத்தில் ஒரு சிற்றுடைமை தோட்டத்தில் தொழில்புரியும் அதிகமான பெண்கள் பெருந்தோட்டங்களில் சேவைபுரிந்து ஓய்வு பெற்றவர்களாவர். அவர்களுக்கு ஊழியர் சேமலாப நிதியத்துக்கு பங்களிப்பு செய்ய வேண்டிய அவசியமில்லை. என்பது அந்த தேயிலை சிற்றுடைமை உரிமையாளரின் கருத்தொன்றாக இருந்தது. இதனை காரணம் காட்டி ஏனைய தொழிலாளர்களுக்கும் அந்த சேவை மறுக்கப்படுகின்றது. எத்தோட்டமும் மிகவும் இலாபகரமாக இயங்கும் ஒரு சிற்றுடைமையாகும்.

பெருந்தோட்டத்தை பொறுத்தவரையில் அங்கு தொழில் புரியும் ஊழியர்களுக்கு தோட்ட நிர்வாகம் பல்வேறு சேவைகளை வழங்குவது கட்டாயமாகும். வீடமைப்பு, கல்வி, சுகாதாரம், உட்கட்டமைப்பு, அடிப்படை உரிமைகள் போன்ற விடயங்களில் அவர்கள் நம்பமுடியாத சட்டங்க்ள ஓரளவு காணப்படுகின்றன. ஆயினும் இவ்வாறான தேயிலை சிற்றுடைமைகளில் தொழில்புரியும் தொழிலாளர்களுக்கு உடைமையாளர்கள் எவ்வித அடிப்படை சேவைகளையும் வழங்குவதில்லை. அதிலும் பெரும்பாலான தேயிலை தோட்டங்களில் குடியிருப்புகளோ அல்லது வேறு எவ்வித பொதுச் சேவை கட்டிடங்களோ இல்லை. குறைந்த பட்சம் அவசர மருத்துவ தேவைகளை கூட தொழிலாளர்கள் பெற்றுக் கொள்வதில் பாரிய சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.
சிறியளவிலான மக்கள் குடியிருப்பாளர்களாக உள்ள தெயிலை சிற்றுடைமைகளில் வீடு பாதை வசதிகள், முன்பள்ளிகள், மருத்துவசாலைகள் குடிநீர், மகப்பேற்று நிலையங்கள், போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. இங்கு வசிக்கும் மக்களின் நலன்பேண் விடயங்களுக்கும் சிற்றுடைமைகளின் உரிமையாளர்களுக்கும் தொழிலுறவைத் தவிர வேறு எவ்வித பிணைப்புக்களும் காணப்படுவதில்லை. எனவே இங்குள்ள மக்கள் மலையக அன்னியப்படுத்தப்பட்ட சமூகத்தினர்களாக காணப்படுகின்றனர்.

தேயிலை சிற்றுடைமைகளில் மக்களின் சமூக பொருளாதார சவால்கள் தொடர்பாக மூத்த சட்டத்தரணி இ.தம்பையா கூறுகையில் “ சிறு தேயிலை தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களில் அதிகமானவர்கள் பல்வேறு சமூக, பொருளாதார, பண்பாட்டு நெருக்கடிகளுக்கு ஆளாகின்றனர். முதலாவதாக அவர்களின் சம்பளம் முறையாக வழங்கப்படுவதில்லை. பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் ஓரளவுக்கு தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக அக்கறை காட்டுவதங்கு சட்டங்கள் உண்டு. ஆனால் சிறு தேயிலை தோட்டங்களில் அவ்வாறில்லை. அங்குள்ள மக்கள் அடிமைகள் போன்றே நடாத்தப்படுகின்றனர். முக்கியமாக அவர்களுக்கான அடிப்படை வசதிகள் எவையும் முழுமையாக வழங்கப்படாமையை எடுத்துக்காட்ட வேண்டும்.

பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களை போன்று இவர்களின் ஊதியத்துக்கு எதுவித சட்ட ஏற்பாடுகளும் எதுவுமில்லை. அவர்கள் பறிக்கும் கொழுந்துக்கு ஏற்ற விதத்திலேயே அவர்களின் நாளாந்த சம்பளம் தீர்மானிக்கப்படும். இது அவர்கள் எவ்வித நிறுவன அமைப்புக்குள்ளும் உள்வாங்கப்படவில்லை என்பதனை குறிக்கின்றது. மேலும் ஊழியர்களின் நலன்புரி விடயங்களிலும் பிராந்திய பெருந்தோட்ட கம்பனிகள் போன்று ஒப்பீட்டளவிலேனும் முக்கியத்துவம் கொடுப்பதில்லை. தேயிலை தனியார் தோட்டங்கள் கூட்டு ஒப்பந்தத்துக்குள் உள்வாங்காப்படினும் கூட்டு உடன்படிக்கையில் எட்டப்படும் தீர்மானங்களுக்கு கட்டுப்படுதல் வேண்டும் என்பது தொழில் ஆணையாளரினால் விடுக்கப்படும் கட்டளையாகும்.

எனினும் இவர்கள் அதற்கு கட்டுப்படுவதில்லை. பெரும்பாலான தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு திருப்தியான வீடுகள் கூட இல்லை. அவர்கள் சட்டத்துக்கு முரணான வகையில் அந்த தோட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்படுகின்றனர். வெளியாரின் தொடர்புகளை கூட அவர்களுக்கு தோட்ட உரிமையாளர் அனுமதிப்பதில்லை. மறுபுறம் ஒரு தோட்டத்திலிருந்து பிரிதொரு தோட்டத்துக்கு மேலதிக வருமானம் ஈட்ட அவர்கள் செல்வதற்கும் அனுமதியில்லை இவ்வாறான சம்பவங்களை பின்னணியாகக் கொண்ட பல வழக்குகளில் எனக்கு தனிப்பட்ட ரீதியாக அனுபவம் உண்டு” என்று தம்பையா கூறினார். சிற்றுடைமைகளில் உள்ள தொழிலாளர்களின் சமூக, பொருளாதார சவால்களுக்கு தீர்வாக தம்பையா அவர்கள் சில யோசனைகளை முன்வைக்கின்றனர். அவையாவன :

• தேயிலை சிற்றுடைமையாளர்களுக்கு தொழில்துறை சார்ந்தும், தொழிலாளர்கள் சார்ந்தும் ஒரு சட்ட ஏற்பாட்டை கொண்டு வருதல்.
• சிறு தேயிலை தோட்ட அபிவிருத்தி அதிகார சபையின் யாப்பில் திருத்தங்களை கொண்டு வருதல்.
• அரசு, சிற்றுடைமையாளர்கள், தொழிலாளர்கள் இணைந்ததற்கான ஒரு கூட்டுறவு திட்டத்தை நடைமுறைப்படுத்தல்.
என்பனவாகும். மேலும் எதிர்காலத்தில் பாரியளவான பொருளாதார (ஆயஉசழ டுநஎநட )திட்டங்களே இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு வழிவகுக்கும். அதற்கு மிகவும் சாத்தியமானது பெருந்தோட்ட தொழில்துறையாகும். சர்வதேச நாணய நிதியம் (ஐஆகு) இன் பரிந்துரைகளும் அவ்வாறானவைகளாக தானிருக்கின்றன. சிறு தெயிலை தோட்டங்களினால் அந்த தேசிய இலக்குகளை அடைவது சிரமமானது. என்பதே சட்டத்தரணி இ. தம்பையாவின் கருத்தாகும்.

அதே போல் தொழிலாளர் உரிமைகள் தொடர்பாக நீண்ட அனுபவங்களை கொண்ட சட்டத்தரணி கௌதமன் அவர்களிடம் இவ்விடயம் தொடர்பாக வினவிய போது அவர் சில கருத்துக்களை முன்வைத்தார். அதாவது பெருந்தோட்டங்களுடன் ஒப்பிடும் போது சிறு தோட்டங்களில் தொழில்புரியும் தொழிலாளர்களின் நிலை மிகவும் மோசமாகவே உள்ளது. பெருந்தோட்டங்களில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்டாலும் ஒரு நிறுவன அமைப்ப காணப்படுவதால் தொழிலாளர்களுக்கு நலத்திட்டங்கள் காணப்படுகின்றன. பதுளை நுவரெலியா மாவட்டங்களில் பிராந்திய பெருந்தோட்ட தோட்டங்களுக்கு அருகாமையில் சிறு தோட்டங்கள் காணப்படுவதால் சம்பள விடயத்தில் ஒரு நியாயம் காணப்படுகின்றது. குறைவான ஊதியம் கிடைத்தால் சிறு தோட்டங்களுக்கு தொழிலாளர்களை பெற்றுக் கொள்வதில் சிரமம் என்பதால் பெருந்தோட்டங்களை அண்டியுள்ள சிறுதோட்டங்கள் சம அளவான சம்பளம் வழங்குகின்றனர்.

ஆனால் எல்லா தோட்டங்களிலும் அவ்வாறு இல்லை. அங்கு உரிமையாளர்கள் வைத்ததுதான் சட்டம். ஊதியம், ஊழியர் சேமலாப நிதியம், நம்பிக்கை நிதியம், ஏனைய நலன்சார் திட்டங்கள், வீட்டு வசதிகள், சுகாதாரம், உள்ளிட்ட விடயங்களில் பாரிய பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இவர்களை சட்டரீதியான ஒர கட்டமைப்புக்குள் கொண்டு வருவதற்கு நாம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.” என்கின்றார்.

இந்த ஆய்வு தொடர்பாக நாம் விஜயம் செய்த சிறு தோட்டங்களில் தொழிலாளர்கள் கூறிய விடயங்கள் இந்த கருத்துக்களை வலியுறுத்துவனவாகவே உள்ளது. கொஸ்லாந்தை பிரதேசத்தை அண்மித்த ஒரு சிறு தேயிலை தோட்டத்தில் தொழில் புரியும் பெண் தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் ஓய்வ பெற்றவர்களாவர். அவர்களுக்கான நாளாந்த சம்பளம் மட்டுமே வழங்கப்படுகின்றது. ஊழியர் சேமலாப நிதியமோ அல்லது வேறெந்த கொடுப்பனவோ வழங்கப்படுவதில்லை. என்று அவர்கள் கூறுகின்றார்கள். இம்மக்களுக்கான வாழ்வாதாரம் மட்டுமே அவர்களின் தேவையாக இருப்பதால் தேயிலை தோட்ட உரிமையாளர்கள் அதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கின்றனர். இவர்களுக்கான நலன்புரி தேவைகளும் முறையாக இல்லை என்பத அவர்களின் வீடுகளை அவதானித்தபோது தெளிவாகியது.

அப்புத்தளை பிரதேசத்தை அண்மித்த ஒரு தனியார் தோட்டத்திற்கு விஜயம் செய்தபோது அங்குள்ள மக்களின் நிலை தொடர்பாக நேரடியாக அறியமுடிந்தது. நீண்டகாலமாக அவர்களுக்கான ஊழியர் சேமலாப நிதியத்துக்காக பணம் செலுத்தப்படவில்லை. அந்த தனியார் தோட்டத்தின் உரிமையாளர் வெளிநாட்டில் வசிக்கும் அதேவேளை அந்த தோட்டத்தை நிர்வாகம் செய்தவர்களால் மக்களின் ஊழியர் சேமலாப நிதிய பணம் முறைகேடாக கையாளப்பட்டு இருப்பதாகவும் அம்மக்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

மேலும் தனியார் தோட்டங்களில் வசிக்கும் மக்கள் அந்த தோட்டத்துக்கு பணிக்கு செல்லாவிட்டால் அவர்கள் அத்தோட்டங்களில் எவ்வித சலுகைகளையும் அனுபவிக்க முடியாது. வீடுகளிலிருந்து அவர்கள் வெளியேற வேண்டும். அவ்வாறு அவர்கள் நடுநிசியில் வெளியேற்ற பட்ட சம்பவங்களும் நடந்திருப்பதாக அறிய முடிகின்றது. இவர்கள் ஒரு அடிமைச் சமூகமாகவே நடத்தப்படுகின்றனர். இந்த விடயத்தை பேராதனை பல்கலைகழகத்தின் அரசறிவியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி இரா.ரமேஸ் அவர்கள் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர். “தேயிலை சிற்றுடைமைகள் என்று சொல்லப்படும் தனியார் தோட்டங்கள் தான் இன்று இலங்கையின் தேயிலை உற்பத்தியில் 70 சதவீதத்துக்கும் அதிகமான பங்களிப்பைச் செய்கின்றன. அரசாங்கமும் அவர்களுக்கு கணிசமான அளவு மானியங்களையும் கடன் உதவிகளையும் வழங்குகின்றது.

அவர்கள் சமீபகாலமாக அதிகமான விளைச்சலையும் பெற்றுக் கொடுக்கின்றனர். கணக்கீட்டின் படி இலங்கையில் 4 இலட்சம் சிறு தேயிலை தொட்ட உரிமையாளர்கள் இன்று உள்ளனர். ஆனால் அவர்களின் தோட்டங்களில் தொழில்புரியும் மக்களின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. உரிமைகள் மீறப்பட்ட அடிமைப்படுத்தப்பட்ட ஒரு சமூகமாக அவர்கள் உள்ளனர். சும்பளம், மேலதிக கொடுப்பனவுகள், நலன்புரி தேவைகள் என்பன ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த தரத்திலேயே உள்ளது.

தென் மாவட்டங்களை பொருத்தவரையில் அங்குள்ள சிற்றுடைமைகளில் தொழில் புரியும் மக்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் இல்லாத காரணத்தினால் அவர்கள் சமூக, பொருளாதார ரீதியாக கைவிடப்பட்ட ஒரு சமூகமாகவே இருக்கின்றனர். இதில் மலையக மக்களும் அடங்குகின்றனர். நுவரெலியா, ஊவா, இரத்தினபுரி போன்ற மாவட்டங்களில் வாழும் மக்களும் அடக்குமுறைக்கு உள்ளான ஒரு சமூகமாகவே உள்ளனர். இவர்கள் தொழிற்சங்கங்களில் இல்லாமையும், நிறுவனமயப்படுத்தப்படாமையும், இவர்களின் தொழில் பாதுகாப்பு இன்று கேள்விக்குறியாகியுள்ளதற்கான பிரதான காரணங்களாகும்.

துனியார் தோட்டங்களில் தொழில்புரியும் மலையக மக்களின் தரவுகள் முழுமையாக இல்லாமையும் எமக்குள்ள ஒரு குறைபாடாகும். இவர்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இது சவாலாக உள்ளது.” என்கின்றார்.
மேலும் தனியார் தோட்டங்களில் பணிபுரிபவர்களை பாதுகாப்பதற்கான திட்டங்களை நாம் வகுக்க வேண்டும். பெருந்தோட்டங்களுடன் ஒப்பிடும் போது தனியார் தோட்டங்கள் இதுவரை நிறுவனமயப்படுத்தப்படவில்லை. எனவே சட்டத்தின் பிரகாரம் தனியார் தோட்டங்களை நிறுவனப்படுத்த வேண்டும். மேலும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அவர்களின் உரிமைகள் தொடர்பாக அறிவூட்டல் செய்வதும் கட்டாயமாகும். இது அவர்களை அடிமை மனநிலையிலிருந்து வெளிக்கொண்டு வரும். அதேபோல் அவர்களுக்கான நியாயமான சம்பளம் (ஆiniஅரஅ றுயபந யுரனநைnஉந ) நலன்புரி சேவைகள் என்பனவற்றை முகாமைத்துவம் செய்வதற்கான பொறிமுறை ஒன்றை அரசு உருவாக்க வேண்டும். அதற்கு எமது அரசியல் பிரதிநிதித்துவம் வலுவானதாக இருப்பது கட்டாயம் என்றும் தெரிவித்தார்.


இந்த விடயங்களை தொகுத்து ஆராய்கையில் சிற்றுடைமைகளில் உள்ள தொழிலாளர்களின் சமூக, பொருளாதார சவால்களை நிவர்த்திச் செய்யும் வகையில் புத்திஜீவிகள் முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில் மலையக மக்கள் சிறு தேயிலை தோட்டங்களில் கொத்தடிமைகளாக உருவாவதை தடுக்க முடியாது.

 

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top