News

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவிப்பு

மலையகத்துக்கான இந்திய அரசின் 10 ஆயிரம் வீட்டுத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படும். கட்சி, தொழிற்சங்க பேதங்களின்றி பயனாளிகளுக்கு உரிய வகையில் வீடுகள் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

அத்துடன், சவாலை எதிர்கொள்ள வேண்டுமெனில் களத்தில் இறங்கியாக வேண்டும். நெருக்கடியை கண்டு பின்வாங்கி நிற்பது ஏற்புடையதல்ல. அதனால்தான் நெருக்கடியான சூழ்நிலையில் அமைச்சு பதவியை ஏற்றேன். மாறாக பதவி ஆசையில் அல்ல எனவும் அவர்  சுட்டிக்காட்டினார்.

உள்ளூராட்சி சபைத்தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் சார்பில் ஊவா மாகாணத்திலுள்ள சபைகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்களுடனான கலந்துரையாடலும், தேர்தல் பிரச்சார ஆரம்பக்கூட்டமும் பண்டாரவளை, மாநகரசபை மண்டபத்தில் ஜீவன் தொண்டமான் தலைமையில் (05.02.2023) நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

உள்ளூராட்சிமன்ற வேட்பாளர்களிடம் குறைநிறைகளையும், மாற்றுக் கருத்துகளையும் கேட்டறிந்த அமைச்சர், உடனடி தீர்வுகளையும், ஆலோசனைகளையும் வழங்கினார். அத்துடன், நாகரீகமான முறையில் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுக்குமாறும் பணிப்புரை விடுத்தார்.

இ.தொ.காவின் உப தலைவரும், ஹல்துமுல்ல பிரதேச சபையின் தவிசாளருமான அசோக்குமார் நிகழ்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். இ.தொ.காவின் உப தலைவரும், சர்வதேச விவகாரங்களுக்கான பொறுப்பாளருமான பாரத் அருள்சாமி, ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சிவலிங்கம், வேட்பாளர்கள், கட்சி செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.

ஊவா மாகாணத்துக்கான முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை வெற்றிகரமாக ஆரம்பித்து வைத்து உரையாற்றிய ஜீவன் தொண்டமான் மேலும் கூறியவை வருமாறு,

” மக்களுக்கு சேவை செய்யவே நான் அரசியலுக்கு வந்துள்ளேன். எனவே, மாலை, பொன்னாடைகள் வேண்டாமென ஏற்கனவே கூறியுள்ளேன். ஆகவே எனக்காக கொண்டுவந்த மாலைகளை அப்படியே கோவிலுக்கு கொண்டுசென்று சாமிக்கு அணிவித்து ஆசிபெறுங்கள். எமது தலைவர் ஆறுமுகன் தொண்டமானுடன் தோளோடு தோள் நின்று பதுளையில் சேவல் கொடியை ஏற்றிய அனைத்து சொந்தங்களுக்கும் நன்றி.

இன்றைய கூட்டத்துக்கு இதொகா தலைவர் செந்தில் தொண்டமான், தவிசாளர் ரமேஷ் ஆகியோரும் வர இருந்தனர். தேர்தல் பிரச்சாரத்தால் அவர்களால் வரமுடியாமல்போனது. நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள். ஒரே குடும்பம். ஆகவே, ஒன்றாக முன்னோக்கி பயணிப்போம்.

நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் உள்ளூராட்சிசபைத் தேர்தல் அவசியமா? அதனால் மாற்றம் ஏதும் ஏற்படுமா? தேர்தல் முடிவுகள் வந்த பிறகு ஜனாதிபதியாக ரணிலே இருப்பார். பிரதமராக தினேஷ் குணவர்தனவே செயற்படுவார்.

அமைச்சரவையிலும் மாற்றம் வராது.  நான் தேர்தலுக்கு எதிரானவன் அல்லன். தேர்தலொன்று நடைபெறுமானால் அது ஜனாதிபதி தேர்தலாகவே இருக்க வேண்டும்.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், சஜித், ரணில் என இருவருக்கும் பதவியேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சவாலை ஏற்றால் அரசியல் எதிர்காலம் இல்லாது போய்விடும் என்பது இருவருக்கும் தெரியும். சஜித் பின்வாங்கினார். ரணில் சவாலை ஏற்றார். நாட்டில் 6 மாதங்களுக்கு முன்னர் இருந்த நிலைமை தற்போது இல்லை. அதேபோல ஒரே இரவில் மாற்றத்தை ஏற்படுத்திவிடவும் முடியாது. உடைப்பது இலகு. கட்டுவதுதான் கஷ்டம். இந்தியா உட்பட பல நாடுகள் உதவிவருகின்றன. சர்வதேச நாணய நிதியத்திடம் கடன் கிடைப்பதற்கு நிதி உத்தரவாதம்கூட வழங்கப்பட்டுள்ளது.

நெருக்கடியான கட்டங்களில் பதுளை மாவட்டமும் காங்கிரஸை தோளில் சுமந்துள்ளது. அந்த மண்ணை மறக்கமாட்டோம். தேர்தல் பிரச்சாரத்தை, எவரையும் கொச்சைப்படுத்தும் வகையில் முன்னெடுக்காமல், நாகரீகமாக முன்னெடுங்கள். ” – என்றார்.

க.கிஷாந்தன்

ஊடக செயலாளர்

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top