(க.கிஷாந்தன்)
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட அனைத்து விடயங்களும் தோழ்வியிலேயே முடிந்துள்ளது. வரிசை யுகம் நீடித்துக்கொண்டே செல்கின்றதே தவிர குறைந்ததாக தெரியவில்லை.
மலையக பெருந்தோட்ட மக்கள் தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் பாரமுகமாகவே அதாவது மாற்றான்தாய் மனபான்மையுடனே செயற்பட்டு வருகின்றனர் என மலையக தொழிலாளர் முன்னணியின் நிதி செயலாளரும், கொட்டகலை ஐக்கிய வர்த்தக சங்கத்தின் தலைவர் புஸ்பா விஸ்வநாதன் தெரிவித்தார்.
கொட்டகலையில் 17.06.2022 அன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த பொருளாதார நெருக்கடியை சுமூகமான நிலைமைக்கு கொண்டு வர முடியாத இந்த அரசாங்கம் முதலில் வெளியேற வேண்டும். தொடர்ந்தும் இந்த அரசாங்கம் இருந்து என்ன தான் பயன்.
ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ச உள்ளிட்ட ராஜபக்ச குடும்பத்தினர் வெளியே சென்றால் மாத்திரமே வெளிநாடுகளில் உள்ளவர்கள் இலங்கைக்கு உதவி செய்ய முன்வருவார்கள். அப்போது தான் நாட்டில் பஞ்சம் தீர்க்க வழி பிறக்கும்.
எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும், மலையகம் உள்ளிட்ட நாட்டு மக்களுக்கு அவர்களின் தேவைகளை பூரத்தி செய்து தருவதாகவே வாக்குறுதி வழங்கப்படுகின்றது. அதேநேரத்தில் மலையக தோட்ட தொழிலாளர்கள் இந்த வாக்குறுதிகளுக்கு அப்பால் மாற்றான்தாய் மனபான்மையுடன் பார்க்கப்படுகின்றார்கள்.
தற்போதுள்ள சூழ்நிலையில் மலையக பெருந்தோட்ட மக்கள் முகங்கொடுத்து வரும் பிரச்சினைகள் தொடர்பில் நுவரெலியா மாவட்ட செயலாளரை சந்தித்து கலந்துரையாடினோம்.
இதன்போது, இன்று நாட்டில் உள்ள பொருளாதார நெருக்கடியில் அதிகமாக பாதிக்கபட்டு வருவது மலையக பெருந்தோட்ட தொழிலாளார்கள். அவர்கள் அன்றாட உணவாக கோதுமை மா உணவையே பிரதானமாக கொண்டுள்ளனர்.
இருப்பினும் இங்கு அவர்களுக்கு கோதுமை மாவு கிடைப்பதில்லை. மானியமாக வழங்கப்படும் என சொல்லப்பட்ட கோதுமை மாவும் கிடைப்பதில்லை.
அதேபோல் அரிசியின் விலையை அரசாங்கம் நிர்ணயத்துள்ளது. ஆனால் நிர்ணயக்கப்பட்ட அரசியின் விலை நுகர்வோருக்கு கிடைப்பதில்லை.
நுவரெலியா மாவட்டத்தை பொருத்த வரையில் வர்த்தக நிலையங்களில் கட்டுப்பாடின்றி அரிசி விற்கப்படுகின்றது. இதனால் மலையக தோட்ட தொழிலாளர்கள் அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டத்தில் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
எனவே நுவரெலியா மாவட்டத்தில் அரசாங்கம் நிர்ணயக்கப்பட்ட விலையில் அரிசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
இதேபோலவே மண்ணெண்ணெய் பாவனைக்கு தோட்ட தொழிலாளர்கள் அதிகமாக தம்மை ஈடுப்படுத்திக் கொண்டுள்ளதால் அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்கு தேவையான மண்ணெண்ணெய்யை வழங்குவதற்காக மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் இவைகளை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும் என நுவரெலியா மாவட்ட செயலாளரிடம் கோரிக்கையை முன்வைத்தோம். இது தொடர்பாக மாவட்ட செயலளார் கவனத்திற் கொண்டு விரைவில் உரிய தீர்வை பெற்று தர நடவடிக்கை எடுப்பதாக தன்னிடம் தெரிவித்தாக அவர் மேலும் தெரிவித்தார்.