தேசத்தின் வளர்ச்சிக்காக மௌனமாக மகத்தான சேவையாற்றும் பெண்களைக் கொண்டாடுவதற்கு ஒரு நாளை மட்டும் ஒதுக்குவது நியாயமில்லை என நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் இன்று (9) தெரிவித்தார்.
நவீன பெண் சமூகத்தில் தனது பங்கை விஞ்சி வேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லை, செத்சிறிபாயவில் அமைந்துள்ள நகர அபிவிருத்தி அதிகார சபையின் வளாகத்தில் இன்று (9) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் நிமேஷ் ஹேரத் மேலும் தெரிவித்ததாவது.
மாக்சிம் கார்க்கியின் கூற்றுப்படி, உலகம் சூரியனின் கதிர்கள் மற்றும் தாயின் பாலில் இருந்து உருவாக்கப்பட்டது. இவ்வுலகில் பிறக்கும் எந்த மனிதனுக்கும் தாயின் பாலில் இருந்து மனித உயிர் கொடுக்கப்படுகிறது. அந்த அளவற்ற ஆற்றலை ஆணுக்குக் கொடுப்பது பெண்தான்.
21 ஆம் நூற்றாண்டின் நவீனப் பெண் சில துறைகளில் ஆணை மிஞ்சி வெகுதூரம் வந்துவிட்டார். பொது சமூக நலனுக்கான பெண்களின் அர்ப்பணிப்பு மிக அதிகம். தற்காலப் பெண், நாட்டின் வளர்ச்சிக்காக மௌனமாகப் பெரும் சேவை செய்து வருகிறார்.
பெண்களைப் பலப்படுத்துவதற்காக, அனைவரின் அணுகுமுறையையும் மாற்ற வேண்டும். சர்வதேச மகளிர் தினத்தில் இந்த ஆண்டு அந்த மனப்பான்மை மாற்றத்தை உருவாக்க உறுதி ஏற்போம். சமூக முன்னேற்றத்தில் பெண்களின் ஈடு இணையற்ற பங்களிப்புக்காக பெண்களுக்கு உரிய இடத்தை ஒரே நாளில் மட்டும் அல்ல, ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும்.
இந்நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதி பணிப்பாளர் நாயகம் (மனித வள முகாமைத்துவம் மற்றும் நிர்வாகம்) டபிள்யூ.ஏ.எஸ்.சுமணசூரிய உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.