– 74ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் ஜனாதிபதிக்கு எஸ்.ஆனந்தகுமார் வாழ்த்து –
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க இன்று தனது 74ஆவது பிறந்த தினத்தை கொண்டாடும் நிலையில் அவரது சேவைகள் நாட்டுக்கு மிகவும் அத்தியாவசியமானதுடம் இந்த நாட்டை கட்டியெழுப்பி இளைஞர்களுக்கான எதிர்காலத்தை அவரால் மாத்திரமே உருவாக்க முடியுமென ஐ.தே.கவின் இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளரும் ஜனாதிபதியின் கீழ் இயங்கும் தொழிற்சங்க முடிவுகளை எடுக்கும் குழுவின் உறுப்பினருமான எஸ்.ஆனந்தகுமார் பிறந்ததின வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது 74ஆவது பிறந்த தினத்தை கொண்டாடுகிறார். கடந்த ஐந்து தசாப்பங்களாக அவர் இந்த நாட்டுக்காக எவ்வித எதிர்பார்ப்புமின்றி உழைக்கிறார். 1977ஆம் ஆண்டு முதல் இன்றைய நவீன தொழில்நுட்ப யுகம்வரை அவரது அனுபவம் உள்ளது. அவர் நாட்டை பொறுப்பேற்றிருந்த அனைத்து சந்தர்ப்பத்திலும் நாடு அதலபாதாளத்தில்தான் இருந்தது.
2001ஆம் ஆண்டு நாட்டை பொறுப்பேற்ற தருணத்தில் யுத்தம் காரணமாக கடுமையான பொருளாதார நெருக்கடியை நாடு எதிர்கொண்டிருந்தது. இரண்டே வருடங்களில் அவர் நாட்டை சிறந்த பாதைக்கு வழிநடத்தினார். ஆனால் துர்திஸ்டவசமாக அவரை 2005ஆம் ஆண்டு மக்கள் ஜனாதிபதியாக்கவில்லை. 2015ஆம் ஆண்டும் அவர் இக்கட்டான நிலையில்தான் நாட்டை பொறுப்பேற்றார். 2019ஆம் ஆண்டாகும் போது மக்களின் வாழ்க்கைச் செலவு குறைந்து நாடு பாரிய பொருளாதார அபிவிருத்தியை நோக்கி நகரும் சூழல் ஏற்பட்டிருந்தது.
அவர் ஜனாதிபதியாக பொறுப்பேற்று ஒரு வருடம்கூட இன்னமும் கடக்கவில்லை. ஆனால், அடுத்த லெபனான் இலங்கைதான் என்று கூறியவர்களுக்கு பதிலளிக்கும் முகமாக உலக நாடுகளின் அங்கீகாரம் பெற்ற நாடாக இலங்கையை மாற்றியுள்ளார். விரைவாக நாட்டு மக்களின் வாழ்க்கைச் சுமைகள் குறைந்து சுபீட்சமான பாதைக்கு ஜனாதிபதி கொண்டுசெல்வார். அவருக்கு அதற்கான அனைத்து சக்திகளும் கிடைக்க வேண்டுமென பிறந்த தின வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
