வடமத்திய மாகாணம்- பொலன்நறுவை மாவட்டம், பொலன்நறுவை வெலிகந்தை சடவக்கை அருள்மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் திருக்கோயில்
எங்கும் எதிலும் எழுந்தருளி நலமருளும் சித்திவிநாயகரே
எங்கள் வாழ்வில் ஒளியேற்ற உறுதிதர வாருமைய்யா
எக்குறையும் அண்டாமல் நிறை வாழ்வு நாம் அடைய
வெலிகந்தை கோயில் கொண்ட சித்தி விநாயகரே வரமருள்வாய்
சோழத் தமிழ் மன்னர் அரசாண்ட பதியிலமர் சித்தி விநாயகரே
சோர்வில்லா மனம் தந்து உயிர்ப்பளிக்க வாருமைய்யா
செய்கருமம் சிறப்புற்று நிறை வாழ்வு நாம் அடைய
வெலிகந்தை கோயில் கொண்ட சித்தி விநாயகரே வரமருள்வாய்
மருதநிலச் சூழலிலே வீற்றிருக்கும் சித்தி விநாயகரே
மானமுடன் நாம் வாழ வழி காட்ட வாருமைய்யா
முயற்சியுடன் முன்னேறும் வாழ்வை நாம் அடைய
வெலிகந்தை கோயில் கொண்ட சித்தி விநாயகரே வரமருள்வாய்
தோன்றாத் துணையிருந்து எமையாளும் விநாயகரே
தோல்வியில்லா நம் வாழ்வை நிலை நிறுத்த வாருமைய்யா
தேய்வில்லா வளர்ச்சி கொண்ட வாழ்வை நாம் அடைய
வெலிகந்தை கோயில் கொண்ட சித்தி விநாயகரே வரமருள்வாய்
அருவுருவாய் ரூபமாய் அடங்காத பல்லுருவில் காட்சிதரும் சித்தி விநாயகரே
அமைதியுடன் நாம் வாழ வழி காட்ட வாருமைய்யா
அஞ்சாத உறுதி கொண்ட வாழ்வை நாம் அடைய
வெலிகந்தை கோயில் கொண்ட சித்தி விநாயகரே வரமருள்வாய்
வேழ முகம் கொண்டிருந்து வினை போக்கும் சித்திவிநாயகரே
வேற்றுமைகளின்று ஒன்றுபட்டு நாம் வாழ வழிகாட்ட வாருமைய்யா
வேதனைகள் நெருங்காத நல் வாழ்வை நாம் அடைய
வெலிகந்தை கோயில் கொண்ட சித்தி விநாயகரே வரமருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.