மத்திய மாகாணம்- கண்டி மாவட்டம் – கண்டி மாநகரம், கட்டுக்கலை அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்
கண்டி மாநகர் தனிலே கோயில் கொண்ட விநாயகரே
கண்ணின் மணியானவனே காத்தருள வந்திடைய்யா
கட்டுக்கலை தனிலிருந்து திருக்காட்சி தருபவனே
கந்தனுக்கு மூத்தவனே உன்கருணை வேண்டுமைய்யா
வரும் வினைகள் துரத்திவிடும் வல்ல விநாயகரே
வந்தவினை போக்கிடவே விரைந்து வந்திடைய்யா
வலுவிழந்து நிற்கும் மக்கள் வளமுற்று வாழ உந்தன்
வல்ல அருளே எமக்கென்றும் வேண்டுமைய்யா
தந்தை தாய் பெரிய ரென்று தரணிக்குச் சொன்னவனே
தறிகெட்டுத் திரிகின்ற மக்களை நீ திருத்திடைய்யா
தண் மதியைத் தலையின்மேல் கொண்டவராம் உன் தந்தை
தரணிக்கு அன்னவரின் கருணையை நீ சேர்த்திடைய்யா
சக்தியம்மை திருமகனே சங்கரனின் மூத்தவனே
சங்கடங்கள் வரும் போது தடை செய்து விடுடிடைய்யா
சண்முகனாம் உன்தம்பி வேல் கொண்டு வந்திருந்து
சக்தியற்ற மக்களுக்குத் துணையிருக்கச் செய்திடைய்யா
தேரேறிப் பவனிவரும் திருமகனே விநாயகரே
திக்கெட்டும் உன் கருணை பொழிந்திடவே வந்திடைய்யா
நம்பியுந்தன் அடிபணியும் எங்களுக்கு
நாளும் துணையிருக்க விரைந்து வந்திடைய்யா
மலைசூழ்ந்த திருவிடத்தில் மாசறுக்க அமர்ந்தவனே
மலைத்து நிற்கும் எங்களுக்கு வழித்துணையாய் இருந்திடைய்யா
மன்னவனே திருமகனே மங்களத்தின் உறைவிடமே
மதமறுத்து அருளளித்து மாட்சி பெறக் கருணை செய்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.