(க.கிஷாந்தன்)
தனது சாதனையை இளம் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இளம் அமைச்சராக தான் சில பணிகளை நிறைவுசெய்ததாகவும், இந்தச் சாதனையை தற்போது தன்னைவிட இளம் வயதில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்து, இளம் அமைச்சருக்கான சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அத்துடன், இளம் தலைமுறையினர் இவ்வாறான சாதனையை செய்ய முன்வர வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
சுமார் 169,000 மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் கேகாலை, அரநாயக்க நீர் விநியோகத் திட்டம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்ட நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தின் அரநாயக்க, மாவனல்ல, ரம்புக்கன பிரதேச செயலகங்களுக்குரிய 135 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளில் நிலவிய குடிநீர் பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையில் இலங்கை அரசாங்கத்தின் 3,847 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு, நெதர்லாந்து அரசாங்கத்தின் 18,650 மில்லியன் ரூபா கடனுதவியின் கீழ், இந்த நீர் விநியோகத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.
இதன் நிர்மாணப் பணிகள் 2018 இல் ஆரம்பிக்கப்பட்டது. நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் தேசிய நீர் வழங்கல், வடிகாலமைப்பு சபையின் மேற்பார்வையின் கீழ் இதன் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.
தினந்தோறும் 21,000 கனமீற்றர் கொள்ளளவு கொண்ட நீர் சுத்திகரிப்பு நிலையம், 07 சேவை நீர்த்தேக்கங்கள், 37 கிலோமீற்றர் பரிமாற்றக் குழாய் அமைப்பு, 120 கிலோமீற்றர் விநியோக குழாய் அமைப்பு ஆகியன இதன் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இந்த திட்டத்தின் கீழ், 52,300 குடும்பங்களை உள்ளடக்கிய சுமார் 169,000 மக்கள் சுத்தமான குடிநீரைப் பெறுவதோடு, அதன் கீழ் 25,200 புதிய நீர் இணைப்புகள் வழங்கப்படும். இதனைத்தவிர ஏற்கனவே உள்ள 27,100 நீர் இணைப்புகள் மேம்படுத்தப்பட உள்ளன.
பெயர்ப் பலகையை திரைநீக்கம் செய்து, குடிநீர் திட்டத்தை மக்களுக்கு கையளித்த ஜனாதிபதி, நீர் கட்டமைப்பையும் திறந்து வைத்தார். பின்னர் குடிநீர் திட்ட வளாகத்தையும் பார்வையிட்டார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க,
“2018 இல், பிரதமராக இருந்தபோது, இந்த குடிநீர் திட்டத்திற்கு அடிக்கல் நாட வந்தேன். இன்று ஜனாதிபதி என்ற ரீதியில் அந்த நீர் திட்டத்தை திறந்துவைக்க வருவதை பெரும் பாக்கியமாக கருதுகின்றேன். இந்த திட்டத்தை நிறைவு செய்ய முடிந்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.
கபீர் ஹசீம் அமைச்சரினால் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டம் அடுத்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டது. அமைச்சர் ஜீவன் தொண்டமானின் பதவிக் காலத்தில் நிறைவு செய்யப்பட்டுள்ளது. நான் செய்த ஒரு சாதனையை அமைச்சர் ஜீவன் தொண்டமான் முறியடித்துள்ளார். இந்த நாட்டிலேயே இளம் அமைச்சர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். அதற்கு முன்னர் நான்தான் அந்த சாதனைக்கு உரிமையாளனாக இருந்தேன். தற்போது அந்த சாதனையை ஜீவன் தொண்டமான் செய்துள்ளார். இளம் தலைமுறையினர் இவ்வாறு முன்வர வேண்டும்.” என்று குறிப்பிட்டார்.