வடமாகாணம்- கிளிநொச்சி மாவட்டம்- கிளிநொச்சி இரத்தினபுரம்- அருள்மிகு சிவசக்தி விநாயகர் திருக்கோயில்
எங்கும் எதிலும் வீற்றிருந்து அருளுகின்ற விநாயகரே
எங்கள் நலன் பேண உன் கருணை வேண்டுமைய்யா
ஏங்கித் தவிக்கும் நிலை இல்லாது செய்திடுவாய்
இரத்தினபுரம் கோயில் கொண்ட சிவசக்தி விநாயகரே
ஓங்கார ஒலியினிலே உறைகின்ற விநாயகரே
ஒற்றுமையாய் நாம் வாழ வழியமைக்க வேண்டுமைய்யா
ஒன்றுபட்டு நாம் வாழ வழியை எமக்கு நீ அருளிடுவாய்
இரத்தினபுரம் கோயில் கொண்ட சிவசக்தி விநாயகரே
உரிமையுடன் அடிபணிவோர் நலன்காக்கும் விநாயகரே
ஊருலகம் மேன்மைபெற உன்கருணை வேண்டுமைய்யா
ஊரோடு கூடிவாழும் உரிமையை, நீ தந்திடைய்யா
இரத்தினபுரம் கோயில் கொண்ட சிவசக்தி விநாயகரே
கிளிநொச்சி பெருநிலத்தில் குடியமர்ந்த விநாயகரே
கிலியற்ற வாழ்வுக்கு உன் ஆசி வேண்டுமைய்யா
குவலயத்தில் குதூகலமாய் வாழ்வதற்கு வழியை நீ செய்திடைய்யா
இரத்தினபுரம் கோயில் கொண்ட சிவசக்தி விநாயகரே
தமிழ் முழங்கும் திருமண்ணில் வந்தமர்ந்த விநாயகரே
தரணியிலே தமிழ் மொழி தலை நிமிர உன் அணைப்பு வேண்டுமைய்யா
தப்பாமல் இந்நிலையை உறுதியாய் வழங்கிவிடு
இரத்தினபுரம் கோயில் கொண்ட சிவசக்தி விநாயகரே
வாட்டம் போக்கி வளமளிக்கும் விநாயகரே
வற்றாத கருணையினை எமக்களிக்க வேண்டுமைய்யா
வேண்டுதல்கள் நிறைவேற்றி மனவுறுதி தந்துவிடு
இரத்தினபுரம் கோயில் கொண்ட சிவசக்தி விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.