வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- யாழ்ப்பாண மாநகரம், கொழும்புத்துறை மேற்கு, அருள்மிகு மன்றுளாடும் விநாயகப் பெருமான் திருக்கோயில்
கொழும்புத்துறை நற்பதியில் கோயில் கொண்ட கணபதியே
கொடுமைகளைந் தெம்மை ஆட்சிகொள்வாய் பெருநிதியே
அல்லல் அகற்றியெமக்கருள் நல்கும் கணபதியே
அறநெறியே நிலைத்துவிட அருள்செய்வாய் அருள்மதியே
இலந்தைக் குளமருகில் இருந்தருளும் கணபதியே
இலக்கின்றித் தவிக்குமெம்மை வழிநடத்து பெருநிதியே
அறிவுதந்து, ஆற்றல் தந்து அரவணைக்கும் கணபதியே
அருகிருந்து காவல் செய்து அணைத்தருள்வாய் அருள்மதியே
யோகர் என்னும் சித்தர் வாழ்ந்தபதி அமர்ந்தருளும் கணபதியே
யோக்கியமாய் நாம்வாழ விதிசெய்வாய் பெருநிதியே
துன்பம் களைபவனே துயர் போக்கும் கணபதியே
தூயவள வாழ்வுவாழ துணைவருவாய் அருள்மதியே
மன்றுளாடும் பெருமான் என்ற நாமம் கொண்ட கணபதியே
மலரடியைப் போற்றி நிற்போம் நாயகனே பெருநிதியே
கல்விச் செல்வம் வழங்குமிடம் அருகு கொண்ட கணபதியே
காத்து அருள் செய்து எம்மை மீட்சிகொள்வாய் அருள்மதியே
உன்னருளால் உலகமெல்லாம் உய்ய வேண்டும் கணபதியே
உற்றவரும் ஊரவரும் உயர்ந்திடச் செய் பெருநிதியே
நற்கருணை பேரருளே நலங்கள் செய்யும் கணபதியே
நாடியுந்தன் அடிபணிந்தோம் காவல் செய்வாய் அருள்மதியே
தேரேறிப் பவனிவரும் திருமகனே கணபதியே
தேசமெங்கும் உன்கருணை நிறைய வேண்டும் பெருநிதியே
பாடிப் பணிந்துன்னை நாம் போற்றுகின்றோம் கணபதியே
பாரினிலே எமக்கு நல்ல வாழ்வளிப்பாய் அருள்மதியே
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
