ஊவா மாகாணம் – பதுளை மாவட்டம், பசறை, அம்முனிவத்தை அருள்மிகு ஸ்ரீ முருகன் திருக்கோயில்
ஆறுதலைத் தந்தருளும் அழகு திருமுருகா
ஆதரித்து அருளளித்து காத்தருள வேண்டுமைய்யா
மகிழ்ச்சி நிறை வாழ்வினையே எமக்கருள வாருமைய்யா
அம்முனிவத்தை வீற்றிருக்கும் ஐயனே வேல் முருகா
அச்சம் தவிர்த் தெம்மை ஆட்கொள்ளும் திருமுருகா
அரவணைத்து எம்மை நீ காத்தருள வேண்டுமைய்யா
துணிவு நிறை மனத்தினையே எமக்கருள வாருமைய்யா
அம்முனிவத்தை வீற்றிருக்கும் ஐயனே வேல் முருகா
நம்பித் தொழும் அடியவர்க்கு நலமளிக்கும் திருமுருகா
நிம்மதியைத் தந்தெம்மை நிலைப்படுத்த வேண்டுமைய்யா
சோர்வில்லா வாழ்க்கையினை எமக்கருள வாருமைய்யா
அம்முனிவத்தை வீற்றிருக்கும் ஐயனே வேல் முருகா
வேல் கொண்டு நின்றிருந்து உலகாளும் திருமுருகா
வெற்றிகளைத் தந்தெம்மை வாழவைக்க வேண்டுமைய்யா
வீரமிகு நல்வாழ்வினையே எமக்கருள வாருமைய்யா
அம்முனிவத்தை வீற்றிருக்கும் ஐயனே வேல் முருகா
கேட்ட வரம் தந்தெம்மை அரவணைக்கும் திருமுருகா
காவலாயிருந் தெம்மை ஆதரிக்க வேண்டுமைய்யா
கௌரவம் மிகு வாழ்வினையே எமக்கருள வாருமைய்யா
அம்முனிவத்தை வீற்றிருக்கும் ஐயனே வேல் முருகா
மயிலேறி உலகளந்த மால் மருகா திருமுருகா
மாசற்ற மனநிலையைத் தந்தருள வேண்டுமைய்யா
முதிர்ச்சி மிகு நல்லுணர்வை எமக்கருள வாருமைய்யா
அம்முனிவத்தை வீற்றிருக்கும் ஐயனே வேல் முருகா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.