Kovil

மன்னார், அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில்

வடமாகாணம்- மன்னார் மாவட்டம் மன்னார், அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் திருக்கோயில்

கருணை மழை பொழிந்துலகை ஆட்சி செய்யும் தாயே
கவலைகளை மறந்து நாம் வாழவழி தந்திடம்மா
காலமெல்லாம் உடனிருந்து காத்தருள வேண்டும்
மன்னார் பதி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா

அழகு மிகு இடமிருந்து அருள் வழங்கும் தாயே
அச்சமற்று நிம்மதியாய் நாம் வாழ வழி தந்திடம்மா
என்றுமுடனிருந்து எமக்கருள வேண்டும்
மன்னார் பதி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா

அன்புடனே அரவணைத்து கருணை செய்யும் தாயே
ஆதரவு தந்தெம்மை வழிநடத்த வந்திடம்மா
அனுதினமும் உடனிருந்து காத்தருள வேண்டும்
மன்னார் பதி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா

ஆசி தந்து வழிநடத்தும் அன்னையே தாயே
ஆறுதலைத் தந்தெம்மை அன்பு செய்ய வேண்டுமம்மா
அல்லல் களைந்தெம்மை வாழவைக்க வேண்டுமம்மா
மன்னார் பதி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா

அமைதியுள்ளம் கொண்டுறையும் மாரித் தாயே
அனைத்துலகும் அமைதியுற வழி செய்ய வந்திடம்மா
பேதமைகளற்ற உலகை உருவாக்க வேண்டும்
மன்னார் பதி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா

தெளிவான வழிகாட்டி நெறிப்படுத்தும் தாயே
தொல்லையில்லா நல்வாழ்வை வாழவழி தந்திடம்மா
தோல்வியற்ற உயர் வாழ்வை தந்தருள வேண்டும்
மன்னார் பதி கோயில் கொண்ட எங்கள் முத்துமாரியம்மா.

ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

To Top