ஐரோப்பா- இங்கிலாந்து இல்போர்ட் – அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்
அருள்தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் பெருமானே
ஆறுதலைத் தந்தெம்மை வாழவைக்க வேண்டுமைய்யா
இல்லையென்ற நிலையின்றி இருக்க வழி தருவாய்
இங்கிலாந்தில் கோயில் கொண்ட இல்போர்ட் செல்வ விநாயகரே போற்றி
உலகமெல்லாம் நலம்பெறவே அருளுகின்ற பெருமானே
ஊரெங்கும் உன்பெருமை பரவிடவே வேண்டுமைய்யா
எண்ணமெல்லாம் உயர்நிலையில் இருக்க வழி தருவாய்
இங்கிலாந்தில் கோயில் கொண்ட இல்போர்ட் செல்வ விநாயகரே போற்றி
ஏக்கமின்றி வாழும் நிலை அளிக்கின்ற பெருமானே
ஐக்கியமாய் நாம்வாழ வழியமைக்க வேண்டுமைய்யா
ஒற்றுமையாய் நாமெல்லாம் இருக்கவழி தருவாய்
இங்கிலாந்தில் கோயில் கொண்ட இல்போர்ட் செல்வ விநாயகரே போற்றி
ஓம் என்ற ஒலியினிலே உறைகின்ற பெருமானே
ஔடதமா யிருந்தெமக்கு சுகமளிக்க வேண்டுமைய்யா
அனைத்துலகும் நன்மைபெற அருளை நீ தருவாய்
இங்கிலாந்தில் கோயில் கொண்ட இல்போர்ட் செல்வ விநாயகரே போற்றி
ஆறுமுகம் கொண்டவனின் அண்ணனான பெருமானே
இன்பமுடன் நாம்வாழ வழியமைக்க வேண்டுமைய்யா
ஈசன் திருவடியில் ஒன்றுபட்டு நாம்வாழ வழி தருவாய்
இங்கிலாந்தில் கோயில் கொண்ட இல்போர்ட் செல்வ விநாயகரே போற்றி
உலகினையே ஆளுகின்ற உத்தமனே பெருமானே
ஊக்கமுடன் நாம் வாழ வழியமைக்க வேண்டுமைய்யா
எத்திக்கும் அருள் பரப்பி உயர்வாழ்வு தருவாய்
இங்கிலாந்தில் கோயில் கொண்ட இல்போர்ட் செல்வ விநாயகரே போற்றி.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.