மத்தியமாகாணம் – நுவரேலியா மாவட்டம், நுவரேலியா சிங்கமலை அடிவாரம் சின்னவேர் கொலை தோட்டம் – அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில்
சித்தமெல்லாம் நிறைந்தவளே மாரியம்மா
நித்தமும் உடனிருந்து காப்பாயம்மா
எத்திக்கும் உன்கருணை பெருக வேண்டும்
சிங்கமலை கோயில் கொண்ட தாயே கருணை செய்வாய்
அழகு மிகு சூழலிலே அமர்ந்தவளே மாரியம்மா
அச்சமில்லா நல்வாழ்வைத் தந்திடம்மா
உற்றவர்கள், ஊரவர்கள் இணைய வேண்டும்
சிங்கமலை கோயில் கொண்ட தாயே கருணை செய்வாய்
மலை சூழ்ந்த திருவிடத்தில் கோயிலுறை மாரியம்மா
மாண்புடனே வாழும் வழி எமக்கென்றும் அருளிடம்மா
முத்தமிழ் உலகமெங்கும் ஒலிக்க வேண்டும்
சிங்கமலை கோயில் கொண்ட தாயே கருணை செய்வாய்
துணையிருந்து காப்பளிக்கும் மாரியம்மா
தொல்லையின்றி வாழவழி காட்டிடம்மா
தாயாகவிருந்துலகைக் காக்க வேண்டும்
சிங்கமலை கோயில் கொண்ட தாயே கருணை செய்வாய்
பாதகங்கள் போக்கவரும் தாயே மாரியம்மா
பாழடையா நிலை தந்து வாழவழி தாருமம்மா
பாரினிலே தலை நிமிர்ந்து வாழும்வழி தர வேண்டும்
சிங்கமலை கோயில் கொண்ட தாயே கருணை செய்வாய்
இயற்கையை இயக்கி நிற்கும் தாயே மாரியம்மா
இதயத்தில் உறைந்திருந்து இனிமை வாழ்வு அருளிடம்மா
இப்புவியில் மானமுடன் இருக்கவழி வேண்டும்
சிங்கமலை கோயில் கொண்ட தாயே கருணை செய்வாய்.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
