மத்திய மாகாணம் – கண்டி மாவட்டம், கண்டி மாநகர், கட்டுக்கலை, அருள்மிகு செல்வ விநாயகர் திருக்கோயில்
கண்டி மாநகரினிலே கோயில் கொண்ட கணபதியே
கண்ணின் மணியானவனே காத்தருள வந்திடைய்யா
கட்டுக்கலை தனிலிருந்து திருக்காட்சி தருபவனே
கந்தனுக்கு மூத்தவனே உன்கருணை வேண்டுமைய்யா
வந்தவினை போக்கிவிடும் வல்ல கணபதியே
வரும் வினைகள் தடுத்துவிடும் வழியைநீ செய்திடைய்யா
வலுவிழந்து நிற்கும் மக்கள் வளமுற்று வாழ உந்தன்
வல்ல அருளை நீ தந்தருள வேண்டுமைய்யா
தந்தை தாய் பெரியரென்று தரணிக்குச் சொன்னவனே
தறிகெட்டுத் திரிகின்ற மக்களை நீ திருத்திடைய்யா
தண்மதியைத் தலையின் மேல் கொண்டவனாம் உன் தந்தை
தரணிக்கு அன்னவரின் கருணையை நீ சேர்த்திடைய்யா
ஏழைப் பங்காளனாக இருப்பவனே கணபதியே
ஏற்றமிகு நல்வாழ்வை தவறாமல் தந்திடைய்யா
உண்மை யென்றும் நிலைபெறவே அருளுகின்ற பேரருளே
எத்திக்கும் நல்லருளை அருளிடவே வேண்டுமைய்யா
சக்தியம்மை திருமகனே சங்கரனின் மூத்தவனே
சங்கடங்கள் வரும் வேளை தடை செய்து விட்டிடைய்யா
சண்முகனாம் உன் தம்பி வேல் கொண்டு வந்திருந்து சக்தியற்ற மக்களுக்குத் துணையிருக்கச் செய்திடைய்யா
மலை சூழ்ந்த திருவிடத்தில் மாசறுக்க அமர்ந்தவனே
மலைத்து நிற்கும் எங்களுக்கு வழித்துணையாய் இருந்திடைய்யா
மன்னவனே, திருமகனே மங்களத்தின் உறைவிடமே
மதமறுத்து அருளளித்து மாட்சி பெறக் கருணை செய்திடைய்யா.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
