வடமாகாணம் – கிளிநொச்சி மாவட்டம் உருத்திரபுரம் அருள்மிகு உருத்திரபுரீசுவரர் சிவன் திருக்கோயில்
அண்டமெல்லாம் ஆளுகின்ற ஐயனே சிவனே
உருத்திரபுரம் கோயில் கொண்டு அருளுகின்ற ஐயா
என்றும் உந்தன் கருணை நிறைந்த அருள் சுரக்க வேண்டும்
உருத்திரபுரம் இருந்தருளும் ஐயனே அருள் தருவாய் ஐயா
ஆறுதலைத் தந்தெம்மை அணைத்தருளும் சிவனே
தமிழ் மண்ணில் கோயில் கொண்டு அருளுகின்ற ஐயா
என்றும் உந்தன் அரவணைப்பில் நாம் வாழ வேண்டும்
உருத்திரபுரம் இருந்தருளும் ஐயனே அருள் தருவாய் ஐயா
சித்தமெல்லாம் நிறைந்துறையும் சித்தனே சிவனே
சீர்மைமிகு பெருவாழ்வை அருளிடுவாய் ஐயா
என்றும் உந்தன் அருளாலே நன்மைகள் கிட்ட வேண்டும்
உருத்திரபுரம் இருந்தருளும் ஐயனே அருள் தருவாய் ஐயா
கிளிநொச்சி பெருநிலத்தில் வந்துறையும் சீலனே சிவனே
கிலேசமில்லா நல்வாழ்வை அருளிடுவாய் ஐயா
என்றும் உந்தன் பார்வையிலே நாம் வாழ வேண்டும்
உருத்திரபுரம் இருந்தருளும் ஐயனே அருள் தருவாய் ஐயா
வளம் கொண்ட தமிழ் மண்ணில் வீற்றிருக்கும் பேரருளே சிவனே
வாழ்வுக்கு ஒளியேற்றி அருளிடுவாய் ஐயா
என்றும் உந்தன் ஆசி எமக்காக வேண்டும்
உருத்திரபுரம் இருந்தருளும் ஐயனே அருள் தருவாய் ஐயா
உமையம்மை அருகு கொண்டு அருள் பொழியும் உருத்திரபுரீசுவரச் சிவனே
உடல் நலமும், உளநலமும் காத்து அருளிடுவாய் ஐயா
என்றும் உந்தன் காவல் எமக்குக்கிட்ட வேண்டும்
உருத்திரபுரம் இருந்தருளும் ஐயனே அருள் தருவாய் ஐயா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.