கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம் – வந்தாறுமூலை – அருள்மிகு ஸ்ரீ கண்ணகி அம்மன் திருக்கோயில்
தாயாக இருந்துலகைக் காவல் செய்யும் தாயே
தரணியில் நிம்மதியாய் வாழ வழியை நீ தருவாய்
திரண்டுவரும் துன்பங்களைத் துடைத்தெறிந்து காப்பாய்
வந்தாறுமூலை கோயில் கொண்ட கண்ணகித் தாயே
நீதிநெறி காக்கவென்று அவதரித்த தாயே
நேர்மையாய் நாம் வாழ வழியை நீ தருவாய்
நோய் நொடிகள் அண்டாமல் துடைத் தெறிந்து காப்பாய்
வந்தாறுமூலை கோயில் கொண்ட கண்ணகித் தாயே
கிழக்கிலங்கை வீற்றிருந்து ஆளுகின்ற தாயே
கிலேசமில்லா நல்வாழ்வை வாழ வழியை நீ தருவாய்
கிட்டவரும் கொடுபகைமை கழிந்து அகற்றிக் காப்பாய்
வந்தாறுமூலை கோயில் கொண்ட கண்ணகித் தாயே
அஞ்சாது நீதி கேட்டு ஆட்சியையே அரட்டுவித்த தாயே
அச்சமின்றி நாம்வாழ வழியை நீ தருவாய்
அற்பர்கள் தரும் துயரை அகற்றியெமைக் காப்பாய்
வந்தாறுமூலை கோயில் கொண்ட கண்ணகித் தாயே
தமிழ்த் தாயின் திருமகளாய் அவதரித்த தாயே
தயக்கமின்றி நாம்வாழ வழியை நீ தருவாய்
துன்பங்கள் தொடராத நிலை தந்து காப்பாய்
வந்தாறுமூலை கோயில் கொண்ட கண்ணகித் தாயே
போற்றியுந்தன் திருத்தாள்கள் தொழுகின்றோம் தாயே
பொழுதும் எம்முடனிருந்து வாழும் வழியை நீ தருவாய்
பொறுமைமிகு மனநிலை தந்து காப்பாய்
வந்தாறுமூலை கோயில் கொண்ட கண்ணகித் தாயே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.