வடமாகாணம் – கிளிநொச்சி மாவட்டம், பொறிகடவை அருள்மிகு அம்மன் திருக்கோயில்
காலமெல்லாம் காத்தெம்மை அரவணைக்கும் தாயே
கதி நீயே என்றுன்னை நம்புகின்றோம் நாங்கள்
எங்கள் குறை தீர்த்தருள விரைந்து நீ வருவாய்
பொறிகடவை கோயில் கொண்ட அம்மா எம்மைக் காப்பாய்
நெஞ்சத்தில் உறைந்திருந்து அமைதிதரும் தாயே
நேர்வழியில் வாழச்செய்து காத்தருள வேண்டும்
தடைதகர்த்து முன்செல்லும் வழியை நீ தருவாய்
பொறிகடவை கோயில் கொண்ட அம்மா எம்மைக் காப்பாய்
கிளிநொச்சி பெருநிலத்தில் குடிகொண்ட தாயே
கிலேசமின்றி நாம் வாழ வழியமைக்க வேண்டும்
குறையின்றி நாம் வாழவழி தருவாய்
பொறிகடவை கோயில் கொண்ட அம்மா எம்மைக் காப்பாய்
மருதநிலச் சூழலிலே வந்துறையும் தாயே
மதிபிறழா நிலை நின்று வாழும் வழி வேண்டும்
மாநிலத்தில் நல்வாழ்வு வாழ வழி தருவாய்
பொறிகடவை கோயில் கொண்ட அம்மா எம்மைக் காப்பாய்
ஆறுதலைத் தந்தெம்மை அரவணைக்கும் தாயே
ஆற்றலுடன் நாம் வாழ வழியமைக்க வேண்டும்
ஏற்றமுடன் வாழ நல்ல வழி அமைத்துத்தருவாய்
பொறிகடவை கோயில் கொண்ட அம்மா எம்மைக் காப்பாய்
நிறைந்த நல்ல நிம்மதியைத் தந்தருளும் தாயே
நிலையான மகிழ்ச்சிக்கு வழியமைக்க வேண்டும்
நோயில்லா வாழ்வதனை வாழ வழி தருவாய்
பொறிகடவை கோயில் கொண்ட அம்மா எம்மைக் காப்பாய் .
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.