கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு அரசரடி பிள்ளையார் திருக்கோயில்
சிவனாரின் திருமகனே சிந்தை நிறை பேரருளே
வளம் கொண்ட தமிழ் மண்ணில் வந்துறையும் திருமகனே
கலக்கமில்லா நிறை வாழ்வைத் தந்தருள வாருமைய்யா
மட்டுநகர் கோயில் கொண்ட மாமணியே பிள்ளையாரே
நேர்வழியில் வாழ என்றும் வழிகாட்டும் பேரருளே
நிம்மதியைத் தந்தென்றும் காவல் செய்யும் திருமகனே
நொந்து மனம் வாடாத நிறை வாழ்வைத் தந்தருள வாருமைய்யா
மட்டுநகர் கோயில் கொண்ட மாமணியே பிள்ளையாரே
அண்டமெல்லாம் ஆளுகின்ற ஆளுமைமிகு பேரருளே
அணைத்தெம்மை ஆதரிக்கும் ஆற்றல் மிகு திருமகனே
ஏற்றமிகு நல்வாழ்வைத் தந்தருள வாருமைய்யா
மட்டுநகர் கோயில் கொண்ட மாமணியே பிள்ளையாரே
பங்கமில்லா வாழ்வினையே உறுதி செய்யும் பேரருளே
பாங்குடன் அரவணைக்கும் அன்புநிறை திருமகனே
நேசமிகு உயர் நிலையைத் தந்தருள வாருமைய்யா
மட்டுநகர் கோயில் கொண்ட மாமணியே பிள்ளையாரே
கிழக்கிலங்கை எழுந்தருளி ஆளுகின்ற பேரருளே
காலமெல்லாம் உடனிருந்து காத்தருளும் திருமகனே
கௌரவமாய் வாழும் வழி தந்தருள வாருமைய்யா
மட்டுநகர் கோயில் கொண்ட மாமணியே பிள்ளையாரே
நிறைந்த இடமெல்லாம் நின்றருளும் பேரருளே
நிலையாக உடனிருந்து ஆளுகின்ற திருமகனே
நித்தம் நிம்மதியைத் தந்தருள வாருமைய்யா
மட்டுநகர் கோயில் கொண்ட மாமணியே பிள்ளையாரே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.