(க.கிஷாந்தன்)
இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், இலங்கை விவசாயிகள் சங்கமும் இன்று ஒன்றாக சங்கமித்துள்ளன. எனவே, இனிவரும் காலப்பகுதியில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் இந்த கூட்டணி தீர்மானிக்கும் சக்தியாக விளங்கும் – என்று இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளரும், பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
நுவரெலியாவில் இன்று (30.07.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு,
” மலையகத்திலே இன்றைய தினம் பாரிய புரட்சி ஏற்பட்டுள்ளது. அதாவது பாரிய தொழிற்சங்கமான இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கமும், நுவரெலியா மாவட்டத்தில் மிக கூடுதலான விவசாயிகளைக்கொண்ட பழமையான தொழிற்சங்கமான இலங்கை விவசாயிகள் சங்கமும் ஒன்றாக சங்கமித்துள்ளன.
இலங்கை விவசாயிகள் சங்கத்தில் 10 ஆயிரம் வரையான அங்கத்தவர்கள் உள்ளனர், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் 11 மாவட்டங்களில் 2 லட்சத்து 75 ஆயிரத்துக்கும் 3 லட்சத்துக்கும் இடைப்பட்ட அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது. எனவே, எமது வசம் வாக்கு வங்கியும் உள்ளது. இது பாரிய புரட்சியாகும். நாம் கூட்டணியாக செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளோம். இலங்கை விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் மாதவன் சுரேஷ் உள்ளடங்களான அங்கத்தவர்கள் இதற்கு இணங்கியுள்ளனர்.
எனவே, இந்த கூட்டணியானது தேர்தலிலும் தீர்மானம்மிக்க சக்தியாக விளங்கும். இனிவரும் நாட்களில் அரசியல் மற்றும் தொழிற்சங்க ரீதியில் எமது பயணம் தொடரும்.
ஜனாதிபதி தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல், மாகாணசபைத் தேர்தல் மற்றும் உள்ளாட்சிசபைத் தேர்தல் என்பவற்றை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றியும் இன்று ஆரம்பக்கட்டமாக கவனம் செலுத்தினோம்.
மலையகத்தை மையப்படுத்தி செயற்படும் பழமையான இந்த சங்கங்களின் இணைவு, மலையகத்தின் மாற்றமாகவும் அமையும்.” – என்றார்.