வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம்- ஆராய்ச்சிக்கட்டு இராஜதழுவ அருள்மிகு இராஜராஜேஸ்வரி அம்பாள் சமேத இராமலிங்க சுவாமி திருக்கோயில் (மானாவரி சிவன் கோயில்)
எங்கும் நிறைந்திருந்து எமையாளும் சிவனே
எப்போதும் உடனிருந்து காத்திடுவாய் ஐயா
எதிர் கொள்ளும் பகை, கொடுமை தடுத்தெம்மைக் காப்பாய்
மானாவாரி கோயில் கொண்ட இராமலிங்கப் பெருமானே
இராஜராஜேஸ்வரி அம்பாளை இடம் கொண்ட சிவனே
இன்ப நிலை தந்தெம்மை உயர்த்திடுவாய் ஐயா
இம்சை தரும் செயல்களைத் தடுத்தெம்மைக் காப்பாய்
மானாவாரி கோயில் கொண்ட இராமலிங்கப் பெருமானே
மேற்கிலங்கைக் கரையினிலே இருந்தாளும் சிவனே
மேதினியில் மேன்மை தந்து வாழவைப்பாய் ஐயா
மாசில்லா வாழ்வுதந்து வாழ்ந்திடவே வழியை நீ செய்வாய்
மானாவாரி கோயில் கொண்ட இராமலிங்கப் பெருமானே
சுடலையிலே இருந்தாடும் தூயவனே சிவனே
சுகங்கள் தந்து சோர்வின்றி இருந்திடுவாய் ஐயா
சோகமில்லா நிலையிலென்றும் வாழவழி செய்வாய்
மானாவாரி கோயில் கொண்ட இராமலிங்கப் பெருமானே
இராமபிரான் பூசையினால் பெருமை பெற்ற சிவனே
இச்சகத்தில் இன்பமாய் வாழச் செய்வாய் ஐயா
எதிர்ப்பாரில்லா வாழ்வு தந்து வாழவைப்பாய் ஐயா
மானாவாரி கோயில் கொண்ட இராமலிங்கப் பெருமானே
உலகனைத்து உயிர்களுள்ளும் உள்ளாடும் சிவனே
உண்மையென்றும் தோற்காது வாழவழி வகுப்பாய் ஐயா
உத்தமர்கள் உயர்வுடனே வாழவைப்பாய் ஐயா
மானாவாரி கோயில் கொண்ட இராமலிங்கப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
