வடமாகாணம்- வவுனியா மாவட்டம் வவுனியா, எல்லப்பர் மருதங்குளம் அருள்மிகு ஆதிசிவலிங்கப் பிள்ளையார் திருக்கோயில்.
மருதநிலச் சூழலிலே வந்தமர்ந்த சிவனார்
மூத்தமகன் விநாயகனையும் உடன் கொண்டு காட்சி தருகின்றார்
கேட்கும் வரம் தந்தெம்மை வாழவைப்பார்
எல்லப்பர் மருதங்குளம் கோயில் கொண்ட ஆதி சிவலிங்கப் பிள்ளையார்
பகை கொண்ட மனம் கொண்டு பாதகம் செய்வோரை
திடமாக அடக்கி யெம்மை வாழவழி செய்திடுவார் சிவனார்
துணையாக இருந்தெம்மை சூழும் பகை தடுத்திடுவார்
எல்லப்பர் மருதங்குளம் கோயில் கொண்ட ஆதி சிவலிங்கப் பிள்ளையார்
வளம் கொழிக்கும் தமிழர் மண்ணில் வந்துறையும் சிவனார்
வளம் சூழ மகிழ்வுடனே வாழவழி செய்வார்
வீரமுடன் விவேகத்துடன் ஒன்றுபட்டு வாழவைப்பார்
எல்லப்பர் மருதங்குளம் கோயில் கொண்ட ஆதி சிவலிங்கப் பிள்ளையார்
கங்கை அம்மை முடிகொண்டு காத்தருளும் சிவனார்
கவலையின்றி நாம்வாழ கருணையையும் செய்வார்
கிட்ட வரும் தீமைகளை எட்டியே விலகச் செய்வார்
எல்லப்பர் மருதங்குளம் கோயில் கொண்ட ஆதி சிவலிங்கப் பிள்ளையார்
திரண்டு வந்த நஞ்சினைத் தான் ஏற்ற சிவனார்
திசையெங்கும் நல்லருளைப் பரப்பிடவே செய்வார்
திறமையுடன் நேர்வழியில் என்றுமெம்மை வாழவைப்பார்
எல்லப்பர் மருதங்குளம் கோயில் கொண்ட ஆதி சிவலிங்கப் பிள்ளையார்
சுடலையிலே நின்றாடும் சீர்மைமிகு சிவனார்
சித்தம் சிதையாத வழிநின்று வாழ்ந்திடவே செய்வார்
சீர்மை மிகு பெருவாழ்வைத் தந்தெம்மை வாழவைப்பார்
எல்லப்பர் மருதங்குளம் கோயில் கொண்ட ஆதி சிவலிங்கப் பிள்ளையார்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.