வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம், சண்டிலிப்பாய் சீரணி – அருள்மிகு நாகபூசணி அம்பாள் திருக்கோயில்
சீரான வாழ்வு தந்து சிறப்பிக்கும் தாயே
சித்திகள் தந்தெமக்கு நலமளிப்பாய் அம்மா
சினமில்லா மனந்தந்து வாழ்விக்க வேண்டும்
சீரணியில் கோயில் கொண்ட நாகபூசணி அம்பாளே சரணம்
அருள் தந்து ஆற்றல் தந்து அரவணைக்கும் தாயே
அமைதி நிறை வாழ்வு தந்து அருளளிப்பாய் அம்மா
சிந்தையிலே அமைதிதந்து வாழ்விக்க வேண்டும்
சீரணியில் கோயில் கொண்ட நாகபூசணி அம்பாளே சரணம்
கேட்ட வரம் தந்து நம்மை வழிநடத்தும் தாயே
கேடுகள் தடுத்தெமக்கு நலமளிப்பாய் அம்மா
கிலேசமில்லா மனம் தந்து வாழ்விக்க வேண்டும்
சீரணியில் கோயில் கொண்ட நாகபூசணி அம்பாளே சரணம்
தூயமனம் கொண்டவர்தம் உளமுறையும் தாயே
துணையிருந்து ஆறுதலைத் தந்திடுவாய் அம்மா
தெளிவான மனம் தந்து வாழ்விக்க வேண்டும்
சீரணியில் கோயில் கொண்ட நாகபூசணி அம்பாளே சரணம்
தாலிபலம் அளித்தருளும் திருமகளே தாயே
தளர்வில்லா வாழ்வினையே தந்திடுவாய் அம்மா
நானென்ற அகந்தையின்றி வாழ்விக்க வேண்டும்
சீரணியில் கோயில் கொண்ட நாகபூசணி அம்பாளே சரணம்
மங்களமாய் வாழ்வதற்கு அருளளிக்கும் தாயே
மாசில்லா வாழ்வினையே தந்திடுவாய் அம்மா
மாநிலத்தில் பெருமையுடன் வாழ்விக்க வேண்டும்
சீரணியில் கோயில் கொண்ட நாகபூசணி அம்பாளே சரணம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.