கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம் – தம்பலகாமம் அருள்மிகு ஆதி கோணேஸ்வரம் சிவன் திருக்கோயில்
மருதநிலச் சூழலிலே கோயில் கொண்ட சிவனார்
மதிதந்து வழியமைத்து வாழும்வழி தருவார்
மனிதகுலம் வாழ்வாங்கு வாழவழி கிடைக்கும்
தம்பலகாமத்தில் உறை ஆதிகோணேசுவரர் அருள்வார்
கிழக்கிலங்கை கோயில் கொண்டு அருள் வழங்கும் சிவனார்
கிலேசமற நாம் வாழ வழியமைத்துத் தருவார்
நம்பித் தொழுவோர் நலன் பேணி வாழவழி கிடைக்கும்
தம்பலகாமத்தில் உறை ஆதிகோணேசுவரர் அருள்வார்
சோழ மன்னர் ஆட்சியிலே சிறப்புற்ற சிவனார்
சோர்வின்றி சுதந்திரமாய் வாழும் வழி தருவார்
செந்தமிழர் வாழ்வாங்கு வாழவழி கிடைக்கும்
தம்பலகாமத்தில் உறை ஆதிகோணேசுவரர் அருள்வார்
ஆதிகோணநாயகர் என்ற பெயரும் கொண்ட சிவனார்
ஆறுதலைத் தந்தெமக்கு நிம்மதியாய் வாழும் வழி தருவார்
ஆற்றலுடன் வாழ்வாங்கு வாழ வழி கிடைக்கும்
தம்பலகாமத்தில் உறை ஆதிகோணேசுவரர் அருள்வார்
வயல் சூழ்ந்த திருவிடத்தில் இருந்தருளும் சிவனார்
வற்றாத நலன்கள் பெற்று வாழும் வழி தருவார்
வறுமை நிலை அண்டாமல் வாழும் வழி கிடைக்கும்
தம்பலகாமத்தில் உறை ஆதிகோணேசுவரர் அருள்வார்
ஹம்சகமனாம்பிகை உடன் உறைந்தருளும் சிவனார்
மீண்டும் எம் பழம் பெருமை பெற்று வாழும் வழி தருவாய்
மேதினியில் எம்நிலைமை உயரும் வழி கிடைக்கும்
தம்பலகாமத்தில் உறை ஆதிகோணேசுவரர் அருள்வார்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
