வடமாகாணம்- மன்னார் மாவட்டம், மன்னார், திருக்கேதீசுவரம்- அருள்மிகு திருக்கேதீசுவர நாதர் சிவன் திருக்கோயில்
அண்டமெல்லாம் ஆட்டுவிக்கும் எங்கள் ஐயா சிவனே
அறநெறியாளனே நீ ஆறுதலளிப்பாய்
இனிய நல்வாழ்வை ஈந்திட வருவாய்
உமையவள் நாதா ஊற்றிடு கருணையை
எத்திக்கும் ஐயனே ஏற்றிடு ஒளியை நீ
ஐங்கரன் தந்தையே ஒருபொழு தெம்மைப்பார்
ஓங்கார விளக்கமே ஔடதமாயிரு
கருணைக் கடலே காட்சி கொடுத்திடு
கிருபை வேண்டும் கீதம் நாடியே
குகனைப் பெற்றாய் கூற்றுவன் தடுத்தாய்
கெதியில் வருவாய் கேடுகள் களைவாய்
கைலை வாசியே கொடுமைகள் துரத்திடு
கோமகனே எம்மைக் கௌவிப் பிடித்திடு
சத்தியம் நீயே சாட்சியும் நீயே
சித்தர்கள் போற்றிடும் சீலனும் நீயே
சுகங்கள் தருவாய் சூதுகள் களைவாய்
சென்னியில் திருவடி சேர்த்தே அருள்வாய்
சைனியம் நடத்திடும் சொற்பெருநாதா
சோதியாயிருக்கும் சௌமிய மூர்த்தியே
பரம் பொருள் நீயே பாடல் பெற்றோனே
பிரம்படி பட்டாய் பீடமமர்ந்தாய்
புண்ணியர் போற்றிடும் பூமகள் நாதா
பெருமைகள் கொண்டோய் பேதமை அகற்று
பையவே வந்து பொன் மனம் தந்திடு
போற்றுவோம் உன்னை நாம் பௌதிக மூலமே
தந்தையும் நீயே தாயுமாயுள்ளாய்
திக்குகளெங்கும் தீமைகள் களைவாய்
துன்பங்கள் போக்கி தூய்மையைத் தருவாய்
தெளிந்த நல்வாழ்வைத் தேடிடும் எமக்கு
தைரியம் தந்து நீ தொல்லைகள் போக்கிடு
தோத்திரம் உனக்கு தௌலமாயிருந்திடு.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.