வடமாகாணம்- யாழ்ப்பாண மாவட்டம்- யாழ் – வண்ணை நல்லூர்- அருள்மிகு வீரமாகாளி அம்மன் திருக்கோயில்
யாழ்ப்பாண தமிழர் காவலாய் அமர்ந்தவளே தாயே
பாழ்பட்ட மனம் கொண்டோர் திருந்திடவே செய்திடம்மா
ஆழ்மனதில் நீயுறைந்து நல்ல வழி காட்டிடம்மா
நல்லூர் பதியமர்ந்த வீரமா காளியம்மா
வெற்றிகள் தந்து நலமளிக்கும் அலை மகளே தாயே
வேதனைகள் களைந்தெம்மை ஆட்கொள்ள வந்திடம்மா
வரும் துயரம் போக்கி விடும் நல்ல வழி காட்டிடம்மா
நல்லூர் பதியமர்ந்த வீரமா காளியம்மா
சூலத்தைத் தாங்கி நின்று அருள் பொழியும் தாயே
கலக்கமில்லா மனநிலையை உறுதி செய்ய வந்திடம்மா
புலன்களெல்லாம் நல்வழியில் செயற்படவே வழி காட்டிடம்மா
நல்லூர் பதியமர்ந்த வீரமா காளியம்மா
தொல்லை களைந்து நலம் பெருக்கும் தாயே
அல்லலற்ற வாழ்வை என்றும் உறுதி செய்ய வந்திடம்மா
நல்ல சிந்தனைகள் வழிநடக்க வழி காட்டிடம்மா
நல்லூர் பதியமர்ந்த வீரமா காளியம்மா
அற்புதங்கள் பல செய்து அரசாளும் திருத்தாயே
நட்பு நிறை மனநிலையைத் தந்தருள வந்திடம்மா
நேர்மை கொண்ட நல்வழியில் நடந்திடவே வழி காட்டிடம்மா
நல்லூர் பதியமர்ந்த வீரமா காளியம்மா
தெளிவான மனம் தந்து வழிகாட்டும் தாயே
தரணியிலே தமிழர் நிலை உறுதி செய்ய வந்திடம்மா
திரண்டு வரும் தீமைகளை சிதைத்திடவே வழிகாட்டிடம்மா
நல்லூர் பதியமர்ந்த வீரமா காளியம்மா..
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.