மத்திய கிழக்கு- டுபாய் நாடு ஜெபல் அலி- அருள்மிகு சிவன் திருக்கோயில்
டுபாய் நாட்டில் கோயில் கொண்ட சிவனே ஐயா
பிறப்புண்டு வாழ்வுண்டு இறப்புமுண்டு
பேரருளோன் வள்ளல் எம் சிவபிரானின்
திருக் கருணைக் கடாட்சம் எம்மைத் தீண்டிவிட்டால்
திண்ணம் அது நற்பேறு அடைவதுண்மை
வழங்கி வரும் திருமுறைகள் காட்டும் வழி
நல்ல வழி என்பதை நாம் உணர்ந்து விட்டால்
பழியேது பாவமேது இப்புவியில்
பகையொழித்துப் பக்குவமாய் வாழலாமே
திருநீறு பூசிவிட்டால் போது மல்ல
திருவேடு பகரும் வழி நடத்தல் வேண்டும்
மனமதிலே உண்மையொளி ஏற்றிவிட்டால்
மதியெங்கும் நல்லவழி காட்டி நிற்கும்
சதிநாச மோசமெம்மை என்றும் தீண்டா
சத்தியத்தின் வழி நின்று வாழும் போது
பதியான எங்கள் சிவன் பார்த்தருள்வான்
பரிதவித்து இனியும் மனம் பதற வேண்டாம்
விதியென்று ஒன்றுண்டு வினைப்பயனும் தானுண்டு
விட்ட வழி சிவன் வழியே என்று விட்டால்
கிட்ட வரும் துயர நிலை ஓட்டிவிட்டு
எட்டிவந்து எமைக்காப்பான் சிவபிரானே
ஓம் என்ற ஒலியினிலே உறையும் அண்ணல்
ஓங்கார நாதமாக ஒலித்திருப்பான்
எங்கும் நிறைந்திருக்கும் எங்கள் ஈசன்
எதற்கும் அவன் திருவடியைப் பற்றிநிற்போம்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.
