கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், மட்டக்களப்பு, அமிர்தகழி அருள்மிகு மாமாங்கேஸ்வரப் பெருமான் திருக்கோயில்
மட்டு மாநகர் தனிலே கோயில் கொண்ட மாமணியே
ஆட்டி நிற்பாய் உலகினையே ஆட்கொள்வாய் எங்களையே
எட்டுத் திக்கும் அருள் பரப்பி ஏற்றி விடும் தலைமகனே
மட்டில்லா நன்மை தரும் மாமாங்கப் பிள்ளையாரே
கிழக்கிலங்கை கோயில் கொண்ட பார்வதியின் புத்திரனே
அழகுமிகு திருநகரின் ஆட்சிநிலை உன்னதன்றோ
ஈழநல்ல நாட்டினிலே அமைதி யெங்கும் நிலைத்துவிட
வாழ்வளித்து வழி வகுப்பாய் மாமாங்கப் பிள்ளையாரே
எங்கும் இன்பம் நிறைந்துவிட ஈந்திடைய்யா உன்னருளை
ஏங்கி நிற்கும் எங்களுக்கு துணையாவாய் நீயன்றோ
கங்கையம்மை முடிகொண்டு காத்தருளும் சிவன் மகனே
எங்கள் நலன் காத்திடவே துணையிருப்பாய்
மாமாங்கப் பிள்ளையாரே
தம்பி திருமுருகன் வேல்கொண்டு எமக்கருள
தும்பிக்கை கொண்டவனே தேவனே அருளிடைய்யா
நம்பிக்கை கொண்டவனே நலம் எமக்குத் தந்திடுவாய்
எம்மிதயம் கோயில் கொண்ட மாமாங்கப் பிள்ளையாரே
பெருவயிறு கொண்ட உந்தன் பேரருளை நாடுகின்றோம்
வரும் தீமை விலக்கிவிட வல்லமையை அருளிவிடு
அருகினிலே நீயிருக்க அச்சமெமக் கில்லையைய்யா
கருத்தினிலே நீயிருப்பாய் மாமாங்கப் பிள்ளையாரே
நன்மை யெங்கும் நிறைந்துவிட நாமெல்லாம் நலமடைய
இன்னல் பகை கொடுமை இல்லாது மறைந்துவிட
தென்னை தரும் கனியாம் தேங்காய் மிகவிரும்பும்
அண்ணலே சரணடைந்தோம் மாமாங்கப் பிள்ளையாரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர், அகில இலங்கை இந்து மாமன்றம்.