வடமாகாணம்- முல்லைத்தீவு மாவட்டம், முல்லைத்தீவு- வற்றாப்பளை அருள்மிகு கண்ணகி அம்மன் திருக்கோயில்
மனிதகுலம் வாழும் வழிகாட்டிய திருமகளே தாயே
மாண்புடனே வாழும்வழி உலகினுக்கு சொன்னாய்
அரசாட்சியின் நேர்மை மனித குலம் உணரவே செய்தாய்
வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா அருள்வாய்
அற்புதங்கள் பல செய்து ஆளுகின்ற தாயே
அன்பு கொண்டு வாழும் உயர் நிலையைச் சொன்னாய்
அச்சம் தவிர்த்து அறநெறியில் வாழும் வழி தந்தாய்
வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா அருள்வாய்
வளங்கொண்ட தமிழ் மண்ணில் வந்துறையும் தாயே
வற்றாத உன்கருணை உலகினுக்கே ஈந்தாய்
ஒழுக்கமிகு நல்வாழ்வை உலகிற்கே தந்தாய்
வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா அருள்வாய்
கடல் நீரில் தீப ஒளிகாணும் தாயே
காலமெல்லாம் உன்காவல் உலகினுக்கே தந்தாய்
கொடுமைகளை எதிர்த்து நிற்கும் மனவுறுதி தந்தாய்
வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா அருள்வாய்
அநீதியை எதிர்க்கின்ற ஆற்றல் தரும் தாயே
ஆதரித்து அரவணைத்து நன்மைகளைச் செய்தாய்
ஆசிதந்து உலகினையே காத்தருளி நின்றாய்
வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா அருள்வாய்
தமிழ்த் தாயின் திருமகளாய் அவதரித்த தாயே
தீமைகளை எரியூட்டும் வல்லமையைத் தந்தாய்
திரண்டு வரும் நன்மைகளை எமக்காக்கி அருள்வாய்
வற்றாப்பளை இருந்தருளும் கண்ணகி அம்மா அருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.