ஐரோப்பா- ஜேர்மனி நாடு பிறேமன் அருள்மிகு ஸ்ரீ வரசித்தி விநாயகர் திருக்கோயில்
ஜேர்மனி வளநாட்டில் கோயில் கொண்ட விநாயகரே
சத்தியத் திருவுருவே சங்கடங்கள் தீர்ப்பவரே நத்தியடி பணிவோர் நலன்களின் காவலரே
ஏற்றம் தரவென்று பிறேமனில் குடி கொண்ட வரசக்தி விநாயகரே
அண்டிவரும் அடியவர்க்கு ஆறுதல் நீயல்லவோ
ஆண்டியாய் நின்றிருந்த அழகனுக்கு மூத்தவனே
வேண்டுவதுன் வரமே வேதனை நீங்கிவிட
மண்டியிட்டே துதித்தோம் பிறேமனில் குடி கொண்ட வரசக்தி விநாயகரே
ஜேர்மனி நாட்டினிலே இருந்தருளும் பெருமானே
இன்னல் களைந்தெம்மை இனிதாய் வாழவைக்க வர வேண்டும்
உன்னாலே எம் வாழ்வு ஏற்றம் பெற்றிடவே
அருள் தருவாய் பிறேமனில் குடி கொண்ட வரசக்தி விநாயகரே
தும்பிக்கை கொண்டவனே நம்பிக்கை தரும் விநாயகரே
நாடி உன் அடி பணியும் நமது நலம் காக்க வேண்டும்
நிம்மதியான வாழ்வை நித்தம் நாம் பெற்றுய்ய வரம் தருவாய் பிறேமனில் குடி கொண்ட வரசக்தி விநாயகரே
ஐரோப்பாவில் திருவிளக்காய் அமர்ந்தருளும் விநாயகரே
அச்சமின்றி வாழும் நிலை எமக்கருள வேண்டும்
வற்றாத உன்கருணை என்றும் நாம் பெற்றிடவே
அருள் தருவாய் பிறேமனில் குடி கொண்ட வரசக்தி விநாயகரே
அண்டமெல்லாம் இயக்குகின்ற சிவனாரின் திருமகனே விநாயகரே
அனைத்துயிரும் நிம்மதியாய் வாழும் நிலை எமக்கருள வேண்டும்
உள்ளமெல்லாம் உன்நாமம் உறுதி பெற்றிடவே
உறுதி தருவாய் பிறேமனில் குடி கொண்ட வரசக்தி விநாயகரே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.