கிழக்கு மாகாணம்- திருகோணமலை மாவட்டம், திருகோணமலை நகரம் அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் திருக்கோயில்
திருகோணமலை நகரமர்ந்து திருவருளைத் தருபவளே
திக்கெங்கும் உன் கருணை நீக்கமற நிறைந்திடவே
பார்போற்றும் தாயவளே தாள் பணிந்து துதிக்கின்றோம்
பார்வையினை எம்மீது செலுத்திடுவாய் பத்திரகாளி அம்மாவே
கிழக்கிலங்கை கோயில் கொண்டு கிலேசமதை அறுப்பவளே
கிட்டி வரும் வேதனைகள் எட்டியெமை விலகிடவே
நத்தியுந்தன் அடிபணிந்து நாளெல்லாம் இறைஞ்சுகின்றோம்
நாயகியே எம்மீது கருணை கொள்வாய் பத்திரகாளி அம்மாவே
ஞாலமெல்லாம் நன்மைபெற அருளுகின்ற பேரருளே
ஞானம் நிறை நல்லறிவு புவியெங்கும் நிறைந்திடவே
தாயாக இருந்து எம்மை வழிநடத்த அழைக்கின்றோம்
தரணியெங்கும் அமைதியுற வரமருள்வாய் பத்திரகாளி அம்மாவே
அன்பு நிறை பேரருளே அணைத் தருளும் திருமகளே
அல்லல் களைந் தெமது அமைதி நிலை நிலைத்திடவே
வல்லமை தந்தருளும் மாசில்லா அடிபணிகின்றோம்
வந்தெமது துயர் போக்கி வளமளிப்பாய் பத்திரகாளி அம்மாவே
நேர்மைமிகு உள்ளங்களில் உறைகின்ற உத்தமியே
நீதி நெறி தவறாத நிலை பாரெங்கும் நிலைபெறவே
ஆளுமை தந்தெம்மை வாழவைக்க வேண்டுகிறோம்
பார்த்து அருளளித்து ஆட்கொள்வாய் பத்திரகாளி அம்மாவே
செழுமைமிகு திருமலையில் கடல் மருங்கில் அமர்ந்தவளே
செம்மை தரும் நல்வாழ்வு சீர்மை பெற்று நிலவிடவே
கருணை கொண்டு காட்சிதர வாவென்று கூவுகின்றோம்
காலமெல்லாம் நல்லவழி காட்டியருள் பத்திரகாளி அம்மாவே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.