கிழக்கு மாகாணம்- மட்டக்களப்பு மாவட்டம், செட்டிப்பாளையம் அருள்மிகு கண்ணகி அம்மன் திருக்கோயில்
தமிழ்த் தாயின் திருமகளாய் வந்துதித்த பெருமகளே
தலைகுனியா நிலைபேணி தர்மத்தை உறுதி செய்தாய்
அறங்காக்கும் உன் நிலைமை உலகமே போற்றுதம்மா
செட்டி பாளையம் கோயில் கொண்ட திருமகளே தாள் போற்றி
மானிடப் பிறப்பெடுத்து வந்துதித்த பெருமகளே
மானம் காத்திடவே உறுதியுடன் நீயிருந்தாய்
உண்மையை வெளிப்படுத்தி நீதியை நிலைக்கச் செய்தாய்
செட்டி பாளையம் கோயில் கொண்ட திருமகளே தாள் போற்றி
சிலம்பேந்தி அரசவையில் நீதி கேட்ட பெருமகளே
தவறு செய்த மன்னவனை நிலை தாழச் செய்தாய்
போற்றுதலுக் குரியவளாய் நின்று நிலை பெற்றாய்
செட்டி பாளையம் கோயில் கொண்ட திருமகளே தாள் போற்றி
நீதி தவறின் மன்னனுக்கும் வீழ்ச்சியென்று உணர்த்திட்ட பெருமகளே
நித்தமும் தவறு செய்யா மனநிலையை உறுதிசெய்தாய்
நொந்து மனம் வாழாநிலை உலகிற்கு உறுதி செய்தாய்
செட்டி பாளையம் கோயில் கொண்ட திருமகளே தாள் போற்றி
கிழக்கிலங்கை கோயிலுறை கோமகளே பெருமகளே
கிலேசமில்லா நல்வாழ்வை என்றுமே நிலைக்கச் செய்வாய்
சிலிர்த்து வரும் நல்மனதை உறுதிபட செய்தாய்
செட்டி பாளையம் கோயில் கொண்ட திருமகளே தாள் போற்றி
தலைதாழா தமிழினத்தின் உயிர்மூச்சே திருமகளே
தடுமாறா மனவுறுதி என்றும் தந்து உறுதி செய்தாய்
எதிர்காலம் வளம் பெறவே கருணையைநீ தந்துவிட்டாய்
செட்டி பாளையம் கோயில் கொண்ட திருமகளே தாள் போற்றி.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.