வடமாகாணம்- வவுனியா மாவட்டம்- குருமண்காட்டுச் சந்தி, அருள்மிகு ஸ்ரீ காளியம்மன் திருக்கோயில்
காவலாயிருந் துலகைக் காக்கின்ற தாயே
காலமெல்லாம் உடனிருந்து காத்தருள வேண்டுமம்மா
குற்றம் குறை பொறுத்தெம்மை அரவணைக்க வேண்டும்
குருமண் காட்டிலுறை அம்மா காளியம்மா
தொல்லை தரும் தீவினைகள் துடைத்தெறியும் தாயே
துணிவு தந்து உடனிருந்து காத்தருள வேண்டுமம்மா
தீயபகை கொடுமைகள் அண்டாமல் காத்தருள வேண்டும்
குருமண் காட்டிலுறை அம்மா காளியம்மா
மகிழ்வு நிறை வாழ்வு தந்து வழிகாட்டும் தாயே
மேன்மையுறும் வழிகாட்டி காத்தருள வேண்டுமம்மா
மோதலின்றி வாழும் வழி தந்தெம்மை வழிநடத்த வேண்டும்
குருமண் காட்டிலுறை அம்மா காளியம்மா
அச்சம் அகற்றியெம்மை ஆளுகின்ற தாயே
அன்புடனே வாழும் வழி காட்டி எம்மைக் காத்தருள வேண்டுமம்மா
உள்ளமதில் நல்லமைதி தந்து எமைக் கூட்டிச் செல்ல வேண்டும்
குருமண் காட்டிலுறை அம்மா காளியம்மா
நெஞ்சமெல்லாம் நிறைந்திருந்து அரவணைக்கும் தாயே
நீதி நெறி தவறாது வாழவைக்க வேண்டுமம்மா
தொய்வின்றி எம் வாழ்வை வளப்படுத்த வேண்டும்
குருமண் காட்டிலுறை அம்மா காளியம்மா
வன்னிப் பெருநிலத்தில் வீற்றிருந்து வளம் அளிக்கும் தாயே
வற்றாத கருணையுடன் வாழ வழி வேண்டுமம்மா
வேற்றுமை இல்லா நல்லுறவு வலுப் பெற வேண்டும்
குருமண் காட்டிலுறை அம்மா காளியம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை,
இந்து மாமன்றம்.