மத்திய மாகாணம் – நுவரெலியா மாவட்டம் – நுவரெலியா, அருள்மிகு ஸ்ரீ மதுரகணபதி திருக்கோயில்
காணுமிடமெங்கும் காட்சிதரும் கணபதியே
கருணை கொண்டு உலகினையே வாழவைக்க வேண்டுமைய்யா
கூடிவரும் நலன்களெல்லாம் எமை வந்து அடைந்திடவே
அருளிடுவாய் நுவரேலியாவில் கோயில் கொண்ட மதுர கணபதியே
கணங்களின் தலைவனாய் விளங்குகின்ற கணபதியே
கவலையில்லா நல்வாழ்வைத் தந்தருள வேண்டுமைய்யா
கிலேசமில்லா உளநிலைமை எமை வந்து அடைந்திடவே
அருளிடுவாய் நுவரேலியாவில் கோயில் கொண்ட மதுர கணபதியே
குவலயத்தைத் தாங்கி நிற்கும் தலை மகனே கணபதியே
குற்றமில்லா உலகினையே உருவாக்க வேண்டுமைய்யா
இன்ப நிலை என்றென்றும் எமை வந்து அடைந்திடவே
அருளிடுவாய் நுவரேலியாவில் கோயில் கொண்ட மதுர கணபதியே
உமையவளின் முதல் மகனாய் வந்துதித்த கணபதியே
உண்மை யெங்கும் நிலை பெறவே உதவிடவே வேண்டுமைய்யா
உயர்ந்த நிலை எமையென்றும் தினம் வந்து அடைந்திடவே
அருளிடுவாய் நுவரேலியாவில் கோயில் கொண்ட மதுர கணபதியே
மலை சூழ்ந்த பெரு நிலத்தில் வந்தமர்ந்த கணபதியே
மாண்பு குன்றா உலகினையே வளப்படுத்த வேண்டுமைய்யா
முன்னேற்றம் என்றும் எமை வந்து சேர்ந்திடவே
அருளிடுவாய் நுவரேலியாவில் கோயில் கொண்ட மதுர கணபதியே
நம்பிச் சரணடைவோரின் நலன் காக்கும் கணபதியே
பகையில்லா உலகினையே உறுதி செய்ய வேண்டுமைய்யா
பூதலத்தில் நன்மைகள் எமை வந்து சேர்ந்திடவே
அருளிடுவாய் நுவரேலியாவில் கோயில் கொண்ட மதுர கணபதியே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.