கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம், மயிலம்பாவெளி அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில்
வளம் கொண்ட தமிழ் மண்ணில் நிலை கொண்ட தாயே
வறுமை நிலை இல்லாது வாழ வழி தருவாய்
வாட்டமில்லா வாழ்வுக்கு வழியமைக்க வேண்டும்
மயிலம்பாவெளி உறைகின்ற காமாட்சி அம்மா அருள்வாய்
கிழக்கிலங்கை தமிழ் மண்ணில் குடியமர்ந்த தாயே
கிலேசமில்லா நிலை தந்து வாழவழி தருவாய்
கலக்கமில்லா வாழ்வுக்கு வழியமைக்க வேண்டும்
மயிலம்பாவெளி உறைகின்ற காமாட்சி அம்மா அருள்வாய்
குலம் காத்து வளமளிக்கும் கோமகளே தாயே
குற்றமற்ற நிலையிலென்றும் வாழவழி தருவாய்
குறையில்லா வாழ்வுக்கு வழியமைக்க வேண்டும்
மயிலம்பாவெளி உறைகின்ற காமாட்சி அம்மா அருள்வாய்
நெஞ்சமதில் நிறைந்திருந்து அருளுகின்ற தாயே
நிம்மதியாய் நாமென்றும் வாழவழி தருவாய்
நீச்சமில்லா நல்வாழ்வுக்கு வழியமைக்க வேண்டும்
மயிலம்பாவெளி உறைகின்ற காமாட்சி அம்மா அருள்வாய்
மாற்றமில்லா பெருங்கருணை வழங்குகின்ற தாயே
மகிழ்வு கொண்ட வாழ்வை என்றும் வாழவழி தருவாய்
மதிப்புமிகு வாழ்வுக்கு வழியமைக்க வேண்டும்
மயிலம்பாவெளி உறைகின்ற காமாட்சி அம்மா அருள்வாய்
தர்மத்தை காக்கும் எங்கள் கருணைமிகு தாயே
தாழ்வில்லா நிலையில் என்றும் வாழவழி தருவாய்
திகட்டாத வாழ்வுக்கு வழியமைக்க வேண்டும்
மயிலம்பாவெளி உறைகின்ற காமாட்சி அம்மா அருள்வாய்.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்.
அகில இலங்கை இந்து மாமன்றம்.