சப்பிரகமுவ மாகாணம் – இரத்தினபுரி மாவட்டம் – இரத்தினபுரி திருவானைக்கட்டி, அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி திருக்கோயில்
வெற்றியின் நாயகனே வேல் கொண்ட நாயகனே
சுற்றம் நலம் பெறவே சூழலை ஆக்கிடைய்யா
குற்றம் களைந்தெங்கும் நல்லமைதி சேர்த்துவிடு
திருவானைக்கட்டி வீற்றருளும் கதிர்வேலாயுத சுவாமியே நீயே காவல்
நாற்றிசையும் உன்னருளால் நலம் பெற வேண்டும் நாயகனே
தீச்செயல்கள் செய்வோரின் கொட்டத்தை அடக்கிடைய்யா
நீசர்களின் செயலடக்கி நல்லவழி காட்டிவிடு
திருவானைக்கட்டி வீற்றருளும் கதிர்வேலாயுத சுவாமியே நீயே காவல்
அஞ்சும் நிலை போக்கி ஆறுதல் தரும் நாயகனே
எங்கும் நிம்மதியை நிலை நிறுத்தி விட்டிடைய்யா
வாட்டம் போக்கி என்றும் நல்லுறுதி சேர்த்துவிடு
திருவானைக்கட்டி வீற்றருளும் கதிர்வேலாயுத சுவாமியே நீயே காவல்
களுகங்கை ஓடுகின்ற நகரமர்ந்த நாயகனே
காவல் செய்து எம்நிலையை உயர்த்தியே விட்டிடைய்யா
குரோத மனம் அகற்றி அன்பு மனம் சேர்த்து விடு
திருவானைக்கட்டி வீற்றருளும் கதிர்வேலாயுத சுவாமியே நீயே காவல்
மலை சூழ்ந்த பெருநகரில் இருந்தருளும் நாயகனே
மாண்புடனே வாழும் நிலை உறுதி செய்து விட்டிடைய்யா
மாற்றமில்லா பெருவாழ்வை எமக்கென்றும் சேர்த்துவிடு
திருவானைக்கட்டி வீற்றருளும் கதிர்வேலாயுத சுவாமியே நீயே காவல்
சூரனை அடக்கி அருள் தந்த நாயகனே
சூழ்ச்சிகளை முறியடித்து வாழவழி விட்டிடைய்யா
சூதுகளை போக்கி வளங்களை நீ சேர்த்துவிடு
திருவானைக்கட்டி வீற்றருளும் கதிர்வேலாயுத சுவாமியே நீயே காவல்.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.