மேல் மாகாணம் – கொழும்பு மாவட்டம் – அவிசாவளை புவக்பிட்டிய – அருள்மிகு முத்துமாரி அம்மன் திருக்கோயில்
கருணை கொண்டு காவல் தரும் தாயே முத்துமாரி
காலமெல்லாம் உடனிருந்து காத்தருள வேண்டும்
உன்காவல் எமக்கென்றும் ஆறுதலைத் தரும்
புவக்பிட்டி கோயில் கொண்ட முத்துமாரியம்மா அருள்வாய்
புலனத்தை ஆளுகின்ற தாயே முத்துமாரி
புனிதமிகு மனநிலையைத் தந்தருள வேண்டும்
உன் அருளே எமக்கென்றும் ஆறுதலைத் தரும்
புவக்பிட்டி கோயில் கொண்ட முத்துமாரியம்மா அருள்வாய்
மனங்களிலே அமைதி தந்து வாழவைக்கும் தாயே முத்துமாரி
மேதினியில் நிம்மதியாய் வாழவழி செய்தருள வேண்டும்
உன்கருணை எமக்கென்றும் ஆறுதலைத் தரும்
புவக்பிட்டி கோயில் கொண்ட முத்துமாரியம்மா அருள்வாய்
சூலத்தைக் கையிலேந்தி துயர்போக்கும் தாயே முத்துமாரி
சுற்றமெல்லாம் சீர்பெறவே உரியவழி தரவேண்டும்
உன் அன்பு எமக்கென்றும் ஆறுதலைத் தரும்
புவக்பிட்டி கோயில் கொண்ட முத்துமாரியம்மா அருள்வாய்
ஆதரவு தந்தெம்மை ஆட்கொள்ளும் தாயே முத்துமாரி
அந்தரிக்கும் நிலையின்றி வாழவழி தரவேண்டும்
உன் ஆசி எமக்கென்றும் ஆறுதலைத் தரும்
புவக்பிட்டி கோயில் கொண்ட முத்துமாரியம்மா அருள்வாய்
மேற்கிலங்கை கோயில் கொண்டு அருள்பொழியும் தாயே முத்துமாரி
மானமுடன் வாழ என்றும் வழி தர வேண்டும்
உன்வழியே எமக்கென்றும் ஆறுதலைத் தரும்
புவக்பிட்டி கோயில் கொண்ட முத்துமாரியம்மா அருள்வாய்.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.