வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம் – தொண்டமனாறு செல்வச்சந்நிதி – அருள்மிகு சந்நிதி முருகன் திருக்கோயில்
சூரனை அடக்கி அருள் தந்த முருகா
வீர வேல் துணையெமக்கு என்றுமே ஐயா
கரங்கள் பன்னிரண்டு கொண்டு அருளுகின்ற முருகா
இரங்கிவந்து எமக்குத்துணை செய்திடுவாய் ஐயா
வட இலங்கைக் கரையினிலே குடிகொண்ட முருகா
ஓடவிட்டு வேடிக்கை பார்ப்பதேன் ஐயா
வேடுவன் திருமகளை மணந்தவனே முருகா
நாடெங்கும் நல்லமைதி காத்திடுவாய் ஐயா
செல்வமிகு சந்நிதியில் கோயில் கொண்ட முருகா
நல்லருளை எமக்களிக்கத் தயங்குவதேன் ஐயா
வல்லமையைத் தந்திடவே வந்திடுவாய் முருகா
அல்லல் அகற்றிடவே துணைபுரிவாய் ஐயா
போர்க்களமாய் உன்பதியும் இருப்பதேன் முருகா
பார்போற்றும் இளங்குமரா சொல்லிடுவாய் ஐயா
நார் நாராய் உன்னடியார் சிதைவதேன் முருகா
தேர் ஏறிப் பவனிவரத் தயங்கி வரும் ஐயா
சண்முகனே, சரவணனே சரணம் நீ முருகா
மண்ணில் இனி குருதி சிந்தும் கொடுமைதீர் ஐயா
உண்மையெங்கும் நிறைந்திடவே உறுதிசெய்வாய் முருகா
எண்ணமெல்லாம் உன்பெருமை நிறைந்திடட்டும் ஐயா
ஆறுபடை வீடு கொண்ட முத்தமிழே முருகா
ஆறுதலை எமக்களிக்க ஓடிவா ஐயா
மாறுபட்டு அழியும் நிலை போக்கிடுவாய் முருகா
வீறு கொண்டு உயர்த்திடவே கருணை தரும் ஐயா.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.