வடமேல் மாகாணம் – புத்தளம் மாவட்டம் உடப்பு – அருள்மிகு ஸ்ரீ வீரபத்திரகாளி அம்மன் திருக்கோயில்
அலைமோதும் பெருங்கடலின் அருகமர்ந்த தாயே
அஞ்சவரும் கொடுமைகளை அகற்றி யெம்மைக் காப்பாய்
தஞ்சமென்று உன்னடியைத் தொழுது நிற்கும் எங்களுக்கு
உடனிருந்து காவல் செய்து அருள்வாய் வீரபத்திரகாளி அம்மா
துரத்தி வரும் துன்பங்களைத் தடுத்திடுவாய் தாயே
துவழும் நிலை அகற்றி யெம்மை வாழவைக்க வருவாய்
நம்பி வந்து உன்னடியைத் தொழுது நிற்கும் எங்களுக்கு
உடனிருந்து காவல் செய்து அருள்வாய் வீரபத்திரகாளி அம்மா
உடப்பு நல்லூரிலே எழுந்தருளும் தாயே
உரிமைகளை நிலை நிறுத்தி உறுதி செய்து காப்பாய்
உன்பாதம் சரணடைந்து ஏங்கி நிற்கும் எங்களுக்கு
உடனிருந்து காவல் செய்து அருள்வாய் வீரபத்திரகாளி அம்மா
மேற்கிலங்கை கோயில் கொண்டு அருளுகின்ற தாயே
மேன்மைமிகு பெருவாழ்வை உறுதி செய்து காப்பாய்
நம்பிவந்து தொழுது நிற்கும் எங்களுக்கு
உடனிருந்து காவல் செய்து அருள்வாய் வீரபத்திரகாளி அம்மா
உடனிருந்து எமைக் காத்து உயர்வளிக்கும் தாயே
உறுதியுடன் முன்னேறும் வழி செய்து காப்பாய்
உதவிக் கரம் நீட்டி உனை வேண்டி நிற்கும் எங்களுக்கு
உடனிருந்து காவல் செய்து அருள்வாய் வீரபத்திரகாளி அம்மா
வாழ்க்கையை வளப்படுத்த வழியமைக்கும் தாயே
வற்றாத கருணை தந்து வழி செய்து காப்பாய்
வேதனைகள் போக்கிடவே உனைத் தொழுது நிற்கும் எங்களுக்கு
உடனிருந்து காவல் செய்து அருள்வாய் வீரபத்திரகாளி அம்மா.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.