வடமாகாணம் – யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரம் அருள்மிகு கந்தசுவாமி திருக்கோயில்
தமிழர் திருநாட்டில் கோயில் கொண்ட திருமகனே
தலை நிமிர்ந்து வாழும்வழி எமக்கருள வேண்டுமைய்யா
தலைதாழா நிலை தந்து என்றும் எமை வாழவைப்பாய்
மாவிட்டபுரம் இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே
வடஇலங்கை வீற்றிருந்து அருள் பொழியும் உமைமகனே
வற்றாத கருணை தந்து வாழும் வழி காட்டிடைய்யா
குற்றமில்லா நிலை தந்து என்றும் எமை வாழவைப்பாய்
மாவிட்டபுரம் இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே
பழைமை மிகு திருக்கோயில் உறைகின்ற திருமகனே
பற்றியுந்தன் அடிபணியும் வழி தந்தருள வேண்டுமைய்யா
புத்தி தடுமாறா நிலைதந்து என்றும் எமை வாழவைப்பாய்
மாவிட்டபுரம் இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே
தமிழ் மொழியின் உயிர்த்துடிப்பாய் இருக்கின்ற சிவன் மகனே
தமிழர் நிலை மாண்புடனே இருக்க வழி தாருமைய்யா
நிலையான வாழ்வு தந்து என்றும் எமை வாழவைப்பாய்
மாவிட்டபுரம் இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே
மயிலேறி உலகளந்த சிவனாரின் திருமகனே
மாண்புடனே தலைநிமிர்ந்து வாழும் வழி தாருமைய்யா
நேர்த்தியாய் நாம் வாழ என்றும் எமை வாழவைப்பாய்
மாவிட்டபுரம் இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே
அறம் காத்து மறமழிக்க அவதரிக்கும் திருமகனே
ஆறாத கவலை பிணியின்றி நாம் வாழும் வழி தருமைய்யா
அன்புடனே இணைந்து என்றும் எமை நிம்மதியாய் வாழவைப்பாய்
மாவிட்டபுரம் இருந்தருளும் கந்தசுவாமிப் பெருமானே.
ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.