காலி – அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரப் பெருமான் திருக்கோயில்

தென்மாகாணம் – காலி மாவட்டம் – காலிமாநகரம் – அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரப் பெருமான் திருக்கோயில்

தென்னிலங்கை கரையிருந்து அருள் வழங்கும் சிவனே
திக்கெல்லாம் உன்னருளைப் பரப்பிடவே வருவாய்
கல்லான மனங்களையும் கரையவைக்கும் கோவே
காலி மாநகரிருந்து கருணை செய்வாய் ஐயா

அலைகடலின் கரையிருந்து அருள் வழங்கும் சிவனே
அருளளித்து அரவணைத்து காத்திடவே வருவாய்
மலைமகளின் அருளுடனே வாழ்வளிக்கும் கோவே
மலரடியைப் போற்றுகின்றோம் காத்தருள்வாய் ஐயா

அண்டத்தையே ஆட்டுவிக்கும் அருள் நிதியே சிவனே
அச்சமின்றி வாழும் வழி தந்திடவே வருவாய்
ஆதரவு தந்தெம்மை அணைத்தருளும் கோவே
அனுதினமும் உடனிருந்து ஆதரிப்பாய் ஐயா

சுடலையிலே ஆடுகின்ற திருவருளே சிவனே
சித்த மெல்லாம் சீரடையும்
பெருமையை நீ தருவாய்
உறுகுணையில் குடியிருக்கும் உத்தமனே கோவே
உறுதி தந்து வாழ்வளிக்க வந்திடுவாய் ஐயா

பாண்டியனின் இலச்சினையைக் கொண்ட எங்கள் சிவனே
பாசமுடன் உன்னடியைப் பணியுமெம்மைக் காப்பாய்
வானவர்கள் போற்றுகின்ற மாசறுக்கும் கோவே
வந்தணைத்து அருளிடவே விரைந்திடுவாய் ஐயா

மீனாட்சி சுந்தரரெனப் பெயர் கொண்ட சிவனே
மீட்சி பெற்று நாம் வாழ நின்னருளைத் தருவாய் கதிர்காமக் கந்தனைத் தந்திட்ட கோவே
காவல் செய்து எமக்குத் துணை இருந்திடுவாய் ஐயா.

ஆக்கம்- த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *