மேல்மாகாணம் – கம்பஹா மாவட்டம் – நீர்கொழும்பு – அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோயில்
சித்திகள் எமக்கருளும் செல்வ விநாயகரே
நத்தி வரும் அடியார் நலன் காக்கும் பெருமானே
ஏற்றியுந்தன் தாள் பணியும் எமக்கருள வந்திடைய்யா
நீர் கொழும்பில் கோயில் கொண்ட சித்தி விநாயகப் பெருமானே
உறுதுணையாய் இருந்தெமது நலன் காக்கும் விநாயகரே
உற்ற துணையாயிருந்து ஏற்றம் தரும் பெருமானே
நத்தியுந்தன் அடிபணியும் எமக்கருள வந்திடைய்யா
நீர் கொழும்பில் கோயில் கொண்ட சித்தி விநாயகப் பெருமானே
தெளிவுதந்து வழிகாட்டி நெறிப்படுத்தும் விநாயகரே
துன்பங்கள் போக்கி எமது நலன் காக்கும் பெருமானே
பக்தியுடன் பணிந்து நிற்கும் எமக்கருள வந்திடைய்யா
நீர் கொழும்பில் கோயில் கொண்ட சித்தி விநாயகப் பெருமானே
ஏழைப் பங்காளனாயிருந்து உயர்வு தரும் விநாயகரே
ஏக்கங்கள் துடைத் தெமக்கு உயர்வு தரும் பெருமானே
நம்பி வந்து போற்றிநிற்கும் எமக்கருள வந்திடைய்யா
நீர் கொழும்பில் கோயில் கொண்ட சித்தி விநாயகப் பெருமானே
கேட்கும் வரம் தந்தெம்மை ஆட்கொள்ளும் விநாயகரே
குவலயத்தில் எங்கள் நலன் காத்தருளும் பெருமானே
கைகூப்பித் தொழுது நிற்கும் எமக்கருள வந்திடைய்யா
நீர் கொழும்பில் கோயில் கொண்ட சித்தி விநாயகப் பெருமானே
மேற்கிலங்கை இருந்து நலம் பொழியும் விநாயகரே
மேன்மை மிகு பெருவாழ்வைத் தந்தருளும் பெருமானே
மாண்பு நிறை வாழ்வினையே எமக்கருள வந்திடைய்யா
நீர் கொழும்பில் கோயில் கொண்ட சித்தி விநாயகப் பெருமானே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.