கிழக்கு மாகாணம் – மட்டக்களப்பு மாவட்டம், சித்தாண்டி, அருள்மிகு சித்திர வேலாயுத சுவாமி திருக்கோயில்
வேலவனே விநாயகருக்கு இளையோனே
உலகினையே ஆடவைக்கும் சிவனார் மைந்தா
காலவெள்ளம் அள்ளிவரும் வேதனைகள் மறைந்துவிட
நலம் தந்து காத்தருள்வாய் சித்தாண்டி வேலவனே
கொடுமனதோர் செயல் அடக்க
நல்லவர்கள் செயல் மேலோங்கி நிலைத்துவிட
அடக்கவரும் தீயபகை அடியோடு புதைந்துவிட
நித்தம் நிம்மதியே எங்கும் நிலவிவிட
அருள் தந்து ஆதரிப்பாய் சித்தாண்டி வேலவனே
நாட்டினிலே நல்லாட்சி நாளும் நிலைத்துவிட
ஆட்டிப்படைக்கின்ற அரக்க நிலை தான் அழிய
போட்டி பொறாமைகள் பூண்டோடு மறைந்துவிட
காட்டுவாய் உன்திறனைச் சித்தாண்டி வேலவனே
எட்டுத் திசை பாலகர்கள் இனிதெம்மைக் காத்துவிட
முட்டவரும் கொடுவினைகள் எட்டியே விலகிவிட
சட்டவிதிமுறைகள் சமத்துவத்தை நிறுவிவிட
வாட்டம் நீங்கிவிட வழிதருவாய் சித்தாண்டி வேலவனே
மருத நிலச்சூழலிலே மயிலேறி வருவோனே
மட்டுமா நிலத்தினிலே குடியிருக்கும் கோமகனே
வேதனைகள் சுமந்து நிற்கும் எங்கள் தமிழ் மக்களையே சித்தாண்டி வேலவனே
உன்னப்பன் சிவன் எங்கே அன்னையவள் உமை எங்கே
காக்கும் கடமை கொண்ட மாமன்தான் எங்கு சென்றான்
கூட்டிவந்து காட்டிவிடு கொடுமைகளை நீக்கிவிடு
பாடியுந்தன் அடிபணிந்தேன் சித்தாண்டி வேலவனே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.