மத்திய மாகாணம் – மாத்தளை மாவட்டம் – மாத்தளை மாநகரம் – குமரமலை அருள்மிகு குமரப் பெருமான் திருக்கோயில்
குவலயத்தை ஆளுகின்ற பேரருளே பெருமானே
குறைவில்லா நிறை வாழ்வை உலகினுக்கு அளித்திடைய்யா
நேர்மை மிகு பெருவாழ்வை உலகிலுள்ளோர் வாழ்ந்து விட
அருளளிப்பாய் குமரமலை குடியமர்ந்த குமரேசப் பெருமானே
குன்றின் மீது அமர்ந்து அருளுகின்ற பெருமானே
வளம் கொண்ட நல்வாழ்வை வையகத்திற்களித்திடைய்யா
நல்லவர்கள் உயர்வடைய நாளும் நன்மைபெற
அருளளிப்பாய் குமரமலை குடியமர்ந்த குமரேசப் பெருமானே
மலையகத்தின் திருநகரில் மாண்புறவே வீற்றிருக்கும் பெருமானே
மாசில்லா உயர்வாழ்வைத் தரணிக்குத் தந்திடைய்யா
முயற்சியுடன் முன்னேறும் நல் வழியைக் காட்டிவிட
அருளளிப்பாய் குமரமலை குடியமர்ந்த குமரேசப் பெருமானே
மலை சூழ்ந்த பெருநகரில் இருந்தருளும் பெருமானே
மாநிலத்தில் நம்முரிமை உறுதிபெற வைத்திடைய்யா
தயக்கமின்றி நிமிர்ந்து நிற்கும் மனநிலையைத் தந்துவிட
அருளளிப்பாய் குமரமலை குடியமர்ந்த குமரேசப் பெருமானே
சூரனை அடக்கியருள் தந்த பெருமானே
சூதில்லா உயர் வாழ்வை பாரினிலே பரப்பிடைய்யா
சுற்றமெல்லாம் சூதின்றி உய்வு பெற
அருளளிப்பாய் குமரமலை குடியமர்ந்த குமரேசப் பெருமானே
வளம் தந்து வாழ்வளிக்கும் தலைமகனே பெருமானே
வற்றாத உன்னருளைத் தரணிக்கு வழங்கிடைய்யா
தமிழ் மொழி தரணியெங்கும் பரந்து பட்டு ஒலியெழுப்ப
அருளளிப்பாய் குமரமலை குடியமர்ந்த குமரேசப் பெருமானே.
ஆக்கம் – த.மனோகரன்.
துணைத் தலைவர்,
அகில இலங்கை இந்து மாமன்றம்.